கீவ்: ரஷ்யா நடத்திய டிரோன்கள் தாக்குதல் மனிதாபிமானமற்ற செயல் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக சாடியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. இந்த போர் தொடங்கி 2 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. இருதரப்பிலும் நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.
இதற்கிடையே, உக்ரைனின் அனல்மின் நிலையங்கள் உள்பட எரிசக்தி கட்டமைப்புகள் நிறைந்த கார்கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை குறிவைத்து ரஷ்ய படையினர் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று டிரோன்கள் எனும் ஆளில்லா விமானங்களால் தாக்குதல் நடத்தியது. அனல்மின் நிலையங்களை குறிவைத்து ரஷ்ய படை தாக்குதல் நடத்தியதால் ஏராளமான நகரங்கள் இருளில் மூழ்கின.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் அன்று தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் தருணத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் நிறைந்த பகுதிகளை குறிவைத்து 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் வாயிலாக தாக்குதலை தொடுத்துள்ளது. இதைவிட மனிதாபிமானமற்ற செயல் இருக்க முடியுமா’ என்று பதிவிட்டுள்ளார். கிறிஸ்துமஸ் கொண்டாடி மகிழும் தருணத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
The post ரஷ்யா டிரோன் தாக்குதல் மனிதாபிமானமற்ற செயல்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சாடல் appeared first on Dinakaran.