தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முரளி ராமசாமி வெற்றி

சென்னை: தமிழ் திரையுலகில் 24 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் முக்கிய சங்கமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தேனாண்டாள் முரளி ராமசாமி பதவி வகித்தார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிக்கு முடிந்தது. தேர்தலில் தலைவர், 2 துணை தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

தலைவர் பதவிக்கு தற்போது பதவியிலுள்ள தேனாண்டாள் முரளி ராமசாமி, மற்றொரு அணி சார்பில் மன்னன் போட்டியிட்டனர். துணை தலைவர்கள் பதவிகளுக்கு அர்ச்சனா கல்பாத்தி, கலைப்புலி ஜி.சேகரன், ராஜேஸ்வரி வேந்தன், தமிழ்க்குமரன், விடியல் ராஜூ, செயலாளர்கள் பதவிகளுக்கு பி.எல்.தேனப்பன், கமீலா நாசர், எஸ்.கதிரேசன், கே.கதிரேசன், ராதாகிருஷ்ணன் போட்டியிட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக 26 பேர் தேர்வு செய்யப்பட வேண்டும். இப்பதவிகளுக்கு நடிகை தேவயானி உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வுபெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன், பாரதிதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர். மொத்தம் 1,406 வாக்குகளில் 1,111 வாக்குகள் பதிவானது. தேர்தலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா உள்பட பலர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். நேற்று காலை 9.30 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பகல் 12 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தலைவராக முரளி ராமசாமி 150 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் இரண்டாவது முறையாக சங்க தலைவராக தேர்வாகியுள்ளார். செயலாளராக கதிரேசன், பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின் வெற்றி பெற்றனர். துணைத் தலைவர்களாக அர்ச்சனா கல்பாத்தி, ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றனர்.

The post தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முரளி ராமசாமி வெற்றி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: