டிக்கெட் எடுக்கும்படி கூறியதால் ஆத்திரம் மாநகர பேருந்து நடத்துனர் சரமாரி அடித்து கொலை: போதை ஆசாமி கைது


சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகன் குமார் (52). இவர், சென்னை சைதாப்பேட்டை வாத்தியார் தோட்டம் பகுதியில் தங்கி, மாநகர போக்குவரத்து கழகத்தின் வியாசர்பாடி பணினையில் நடத்துநராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் 10ம் வகுப்பும், இளையமகள் 8ம் வகுப்பும் பயின்று வருகின்றனர். நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் எம்.கே.பி நகரில் இருந்து மாநகர பேருந்து (த.எ.46ஜி) பயணிகளுடன் கோயம்பேடு நோக்கி புறப்பட்டது.

இதில், ஜெகன் குமார் பணியில் இருந்தார். அமைந்தகரை என்.எஸ்.கே நிறுத்தம் சென்றபோது, மதுபோதையில் ஒருவர் பேருந்தில் ஏறியுள்ளார். அவரிடம் டிக்கெட் எடுக்குமாறு ஜெகன் குமார் கேட்டுள்ளார். அப்போது போதையில் இருந்த அந்த நபர், ஆத்திரமடைந்து நடத்துநரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.‌ இதனால் ஜெகன் குமாருக்கும், போதை ஆசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

உடனே ஜெகன்குமார், தான் கையில் வைத்திருந்த டிக்கெட் கொடுக்கும் ஸ்வைப்பிங் மிஷினால் போதை ஆசாமி தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பயணியும் நடத்துனரை கையால் சரமாரி தாக்கியுள்ளார். இதில் இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஜெகன் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த பயணிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவலறிந்து அங்கு வந்த அமைந்தகரை போலீசார், இது குறித்து விசாரணை நடத்தியதில் பேருந்தில் பயணம் செய்த பயணி வேலூர் மாவட்டம் மாதனூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (53) என்பதும், தனது உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்க வந்துள்ளார்.  பின்னர் கோயம்பேடு சென்று அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக என்.எஸ்.கே நகரில் பேருந்தில் ஏறியதும், அப்போது டிக்கெட் எடுக்காத தகராறில், நடத்துனர் ஜெகன் குமாருடன் சண்டையிட்டு, அவரை தாக்கியதும், இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கோவிந்தன் மீது கொலை வழக்கு பதிந்து, அவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

The post டிக்கெட் எடுக்கும்படி கூறியதால் ஆத்திரம் மாநகர பேருந்து நடத்துனர் சரமாரி அடித்து கொலை: போதை ஆசாமி கைது appeared first on Dinakaran.

Related Stories: