ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் ஈடி ரெய்டு: எடப்பாடியின் நண்பர் வீடு, கல்லூரி, உறவினர் வீடுகளில் ஐ.டி. சோதனை

சென்னை: அமைச்சராக இருந்த போது கட்டுமான நிறுவனத்திடம் ரூ.28 கோடி லஞ்சம் பெற்றது தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 13க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்கத்துறை (ஈடி) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இச் சோதனையில் வைத்திலிங்கம் தனது மனைவி மற்றும் மகன்கள் பெயரில் சட்டவிரோதமாக குவித்து வைத்திருந்த பல கோடி ரூபாய் சொத்துக்கான ஆவணங்கள், பத்திரங்கள், வங்கிப் பணப் பரிமாற்ற ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நண்பர் இளங்கோவன், அவரது சம்பந்தி வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா தெலுகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்திலிங்கம். நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்த இவருக்கு தங்கம் என்ற மனைவி, பிரபு, ஆனந்த பிரபு, சண்முகபிரபு ஆகிய 3 மகன்கள் மற்றும் பிரதீபா என்ற மகள் உள்ளனர். வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2011-2016ம் ஆண்டுகள் அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி துறை, நகர்புற வளர்ச்சி மற்றும் கூடுதலாக விவசாயத்துறை அமைச்சராக வைத்திலிங்கம் பதவி வகித்தார்.

அப்போது வைத்திலிங்கம் தனது பதவி காலத்தில் ராம் குழுமத்திற்கு சொந்தமான ராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் சார்பில் பெருங்களத்தூர் பகுதியில் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகள் கொண்ட 1,453 வீடுகள் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கிய விவகாரத்தில், அந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.27.90 கோடி வைத்திலிங்கம் லஞ்சமாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கடந்த மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், வைத்திலிங்கம் தனியார் கட்டுமான நிறுவனமான ராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் அவரது மகன் நடத்தும் முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ரூ.27.90 கோடி லஞ்சப்பணம் கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அந்த பணத்தில் வைத்திலிங்கத்தின் மகன் பிரபு நடத்தும் முத்தம்மாள் எஸ்டேட் நிறுவனம் சார்பில் ரூ.23 கோடி அளவில் பூந்தமல்லி திருவெறும்பூர் பகுதியில் நிலம் வாங்கி குவித்து இருந்ததும் விசாரணையில் உறுதியானது.

மேலும், வைத்திலிங்கம் அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அமைச்சராக இருந்து காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 1,057 சதவீதம் அளவுக்கு சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் பிரபு மற்றும் சண்முக பிரபு மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் என மொத்தம் 11 பேர் மீது சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த மாதம் 19ம் தேதி வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தனியாக விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே சட்டவிரோத பணப் பரிமாற்றம் சட்டத்தின் கீழ், வைத்திலிங்கம் தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் இருந்து பெற்று விசாரணை மேற்கொண்டனர். அதில், வைத்திலிங்கம் அமைச்சராக பணியாற்றிய காலத்தில் தனது பதவியை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்று, அந்த பணத்தில் தனது மனைவி மற்றும் மகன்கள் பெயரில் தனியாக நிறுவனங்கள் தொடங்கி அதன் மூலம் பல இடங்களில் நிலங்கள் வாங்கியும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து வைத்திலிங்கம், அவரது மகன் பிரபு மற்றும் ரூ.27.90 கோடி லஞ்சம் பணம் கொடுத்த ராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம், அதன் உரிமையாளர்கள் தொடர்புடைய வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் அதிரடியாக சோதனை நடத்தினர். முன்னதாக வைத்திலிங்கம் வசித்து வரும் சொந்த மாவட்டமான தஞ்சாவூருக்கு நேற்று முன்தினம் இரவே சென்னையிலிருந்து 29 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் ரகசியமாக வந்து, அங்கு நேற்று காலை 6.45 மணிக்கு வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிகாடு பகுதியில் உள்ள வீட்டுக்கு வந்து அங்கும் சோதனை நடத்தினர். வைத்திலிங்கத்தின் வீடு, காரிலும் சோதனை நடந்தது. இதேபோல் தஞ்சை கணபதி நகரில் உள்ள வைத்திலிங்கத்தின் இளைய மகனான டாக்டர் சண்முக பிரபு வீட்டிலும் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் சோதனை நடப்பதாக தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள் அவரது வீட்டு முன் குவிந்தனர்.  இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையை பொருத்தவரையில், வைத்திலிங்கத்தின் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏ விடுதிக்கு நேற்று காலை 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனர். அப்போது வைத்திலிங்கத்தின் அறை பூட்டப்பட்டிருந்தது. உடனே அதிகாரிகள் விடுதியின் பொறுப்பார்களை தொடர்பு கொண்டு மாற்று சாவி வாங்கி சோதனை நடத்தினர். அதேபோல் தி.நகரில் உள்ள அவரது மகன் பிரபுவின் வீடு 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். அசோக் நகர் 10வது அவென்யூரில் உள்ள மகன்கள் மற்றும் மகள் நடத்தும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட 6 நிறுவனங்கள் அமைந்துள்ள கட்டிடத்தில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 பேர் வந்தனர். ஆனால் அலுவலக கட்டிடம் திறக்கப்பட வில்லை. இதனால் 2 மணி நேரம் அதிகாரிகள் கட்டிடத்தின் முன்பு காத்திருந்தனர். பின்னர் கட்டிடத்தின் சாவி வந்த பிறகு அதிகாரிகள் 6 நிறுவனங்களிலும் தனித்தனி குழுக்கமாக சோதனை நடத்தினர். அதேபோல், ஆழ்வார்பேட்டை ராமசாமி சாலையில் வைத்திலிங்கத்திற்கு ரூ.27.90 கோடி பணம் கொடுத்த கட்டுமான குழுமத்திற்கு சொந்தமான ராம் நிதி நிறுவனம், கோடம்பாக்கம் என்டிஆர் சாலையில் உள்ள ராம் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி கோடீஸ்வரி வீடு, தி.நகரில் உள்ள ராம் கேபிட்டல் கார்ப்பரேட் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மேலும், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கூட்டுறவு நகர், அன்னம்மாள் தெருவில் உள்ள ராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் அதிகாரியான ரவிச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 4 பேர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வைத்திலிங்கம் தனது மனைவி, மகன்கள், மகள் பெயர்களில் வாங்கி குவித்த சொத்து ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள், பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள பங்கு பத்திரங்கள், மூத்த மகன் பிரபு நடத்தும் முத்தம்மாள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ெசய்யப்பட்டுள்ள முதலீட்டு ஆவணங்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல கோடி ரூபாய்க்கு வாங்கி குவிக்கப்பட்டுள்ள நில பத்திரங்கள், கணினி, லேப்டாப், பென் டிரைவ் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் ராம் ப்ராப்பர்ட்டீஸ் கட்டுமான நிறுவனத்தின் வங்கி கணக்குகள், பணம் பரிமாற்றம் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேதோடு இல்லாமல், வைத்திலிங்கம் அமைச்சராக இருந்த போது  ராம் ப்ராப்பர்ட்டீஸ் கட்டுமான நிறுவனத்திற்கு சிஎம்டிஏ மூலம் அரசு ஒப்பந்தங்கள் அதிகளவில் விடப்பட்டது.

இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வைத்திலிங்கம் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் வைத்து ேநற்று மதியம் எழும்பூரில் உள்ள எம்எம்டிஏ தலைமை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, 2011-2016ம் ஆண்டு காலத்தில் ராம் ப்ராப்பர்ட்டீஸ் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மொத்த டெண்டர்கள் எத்தனை, எத்தனை கோடிக்கு டெண்டர் விடப்பட்டது. அதற்காக ராம் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் விபரங்கள் அனைத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன்படி சென்னையில் மட்டும் வைத்திலிங்கம் மற்றும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான வீடு அலுவலகம் என மொத்தம் 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர வைத்திலிங்கத்தின் சொந்த ஊர், மகன் வசித்து வரும் வீடு என மொத்தம் 13 இடங்களில் நேற்று இரவு வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அதேநேரத்தில், எடப்பாடி நெருங்கிய நண்பரும் சேலம் புறநகர் அதிமுக மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவரான இளங்கோவன் உள்ளார். இவர் தனது கல்வி நிறுவனங்களில் முறையாக கணக்கு காட்டாமல் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். குறிப்பாக, இளங்கோவனுக்குச் சொந்தமாக, திருச்சி மாவட்டம் முசிறி அருகே எம்.புதுப்பட்டியில் எம்ஐடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், பள்ளிகள், முசிறி அருகே உள்ள வெள்ளாளப்பட்டியில் வேளாண் பொறியியல் கல்லூரியில் சோதனை நடந்தது. இளங்கோவனுக்கு சொந்தமான எம்ஐடி கல்லூரி மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரியில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள், இரண்டு விதமாக கணக்கு பரிமாற்றம் செய்ததற்கான ஹாட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையின் இடையே பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கியது. கல்லூரிகளை இளங்கோவன் நடத்தி வருகிறார். இவரது மகன் பிரவீன் துணை தலைவராக இருந்து வருகிறார். மேலும், கோவையில் உள்ள இளங்கோவனின் சம்பந்தி பாலசுப்பிரமணியனுக்கு சொந்தமான ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட், அருண் அஸ்வின் பேப்பர் மில்ஸ் பிரைவேட் லிமிடெட், ப்ளூ மவுண்ட் பேப்பர் பிரைவேட் லிமிடேட், ஆகியவற்றின் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிநாடுகளில் இருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்த ஆவணங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்ட ஆவணங்களும் பறிமுதல் ெசய்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு செக் வைக்கும் வகையில் இரண்டு பேரின் நெருங்கிய நண்பர்களின் வீடுகள், கல்லூரிகளில் சோதனை நடந்தது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்ஐடி கல்லூரியில் ஏற்கனவே திருச்சி லஞ்ச ஒழிப்பு துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ரூ.28 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் ஈடி ரெய்டு: எடப்பாடியின் நண்பர் வீடு, கல்லூரி, உறவினர் வீடுகளில் ஐ.டி. சோதனை appeared first on Dinakaran.

Related Stories: