புழல் பகுதியில் தெரு, சாலையோரம் திரியும் மாடுகளால் விபத்து அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புழல்: புழல் பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளால் அவதிக்குள்ளாகி வரும் பொதுமக்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட 23, 24வது வார்டுகளான புழல், காவாங்கரை, கன்னடபாளையம் சக்திவேல் நகர், காந்தி பிரதான சாலை, ஒற்றைவாடை தெரு, பஜனை கோயில் தெரு, லட்சுமி அம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மாடுகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையில் சுற்றித்திரிகின்றன.

இதனால், பல்வேறு தெருக்கள் வழியாக நடந்து செல்பவர்களும், பைக்கில் செல்பவர்களும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். ஒருசில நேரங்களில் பைக்கில் செல்பவர்கள் மாடுகள் மீது மோதி விபத்தில் சிக்கி படுகாயமகின்றனர். இதுகுறித்து மாதவரம் மண்டலம் 23வது வார்டு, 24வது வார்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை சிறைபிடித்து, மாநகராட்சிக்குச் சொந்தமான காப்பகத்தில் மாடுகளை அடைத்து, மாட்டு உரிமையாளர்களிடம் உரிய அபராதம் விதிக்க வேண்டும் என மாடுகளால் பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், புழல் சக்திவேல் நகர் உள்பட பல்வேறு தெருக்களில் இரவு நேரங்களில் பைக்கில் செல்லும்போது, எதிர்பாராத விதமாக மாடுகள் மீது மோதி நாங்கள் கீழே விழுந்து படுகாயமடைந்து வருகிறோம். இதனால், கண்ணாடி உடைந்து வாகனம் சேதமடைவதுடன், கீழே விழும்போது எங்கள் செல்போன்களும் உடைந்து விடுகிறது. குறிப்பாக, மாடுகளில் இருந்து பால் கறந்துவிட்டு செல்பவர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்ற கோணத்தில் மாடுகளை தெருக்களிலேயே விட்டு விடுகின்றனர். எனவே, மாதவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகள், இனிவரும் காலங்களில் மாடுகளை அவரவர் வீடுகளில் கட்டி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post புழல் பகுதியில் தெரு, சாலையோரம் திரியும் மாடுகளால் விபத்து அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: