பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே வடமதுரை கிராமத்தில் உள்ள நாகாத்தம்மன் கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி மங்கல இசை, கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீரை, கலசங்களில் நிரப்பி பூஜை செய்து சிவாச்சாரியர்கள் தலையில் சுமந்து மேள, தாளங்கள் முழங்க கோயிலைச்சுற்றி வலம் வந்து கோபுர கலசத்திற்கும், மூலவர் நாகாத்தம்மனுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு மூலவர் நாகாத்தம்மன் காட்சியளித்தார்.

நிகழ்ச்சியில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பி.ஜெ.மூர்த்தி, ஒன்றியக்குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ், ஊராட்சி தலைவர் காயத்ரி கோதண்டன், மாவட்ட கவுன்சிலர் சித்ரா முனுசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீனிவாசன், வடமதுரை ஒன்றிய கவுன்சிலர் ஜமுனா அப்புன், முரளி, கல்பட்டு வெங்கடேசன், பார்த்திபன், ஹரி, சிலம்பரசன் உட்பட பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற துணை தலைவர் பாக்கியலட்சுமி ரமேஷ், நித்தியானந்தன் சாந்தி, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதேபோல் கும்மிடிப்பூண்டி வட்டம் மாநெல்லூர் ஊராட்சி சந்தப்பேட்டையில் ஸ்ரீசுந்தர விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ சுந்தர விநாயகர் மூலவர் மற்றும் ஆதி விநாயகர், உற்சாக விநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா, ஸ்ரீ சுப்பிரமணியர் ஆகியோருக்கு பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரைக்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின் பெருந்திரளாக பங்கேற்ற பக்தர்கள் மீது புனித நீரானது தெளிக்கப்பட்டது.

நிகழ்வின் நிறைவாக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா, சுப்பிரமணியர் திருவீதி உலா நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், நடிகர் சம்பத், பொதுக்குழு உறுப்பினர் மாதர்பாக்கம் குணசேகரன், ஒன்றியக்குழு தலைவர் சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் லாரன்ஸ், மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் மங்கலம் சுரேஷ், தட்டம்பேடு முன்னாள் ஊராட்சி தலைவர் முரளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி கோயில்களில் கும்பாபிஷேக விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: