செங்குன்றம் மார்க்கெட் பகுதியில் பேருந்து நிழற்குடையில் தனிநபர் ஸ்டிக்கர்: உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

புழல்: செங்குன்றம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடையில் தனிநபர் பெயரில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம் மார்க்கெட் பகுதியிலிருந்து அண்ணா பேருந்து நிலையம் செல்லும் வழியில், மார்க்கெட் பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த, பேருந்து நிறுத்தத்தில் பல ஆண்டுகளாக நிழற்குடை அமைக்கப்படாததால் பேருந்து பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இவ்வாறு, பாதிப்புக்குள்ளாகி வரும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில், செங்குன்றம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாதவரம் மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

இக்கோரிக்கையின்படி, மாதவம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செங்குன்றம் மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த, புதிய பேருந்து நிழற்குடை பெயர் பலகையில், மார்க்கெட் பேருந்து நிறுத்தம் என எழுதாமல், தனிநபர் சீனு என்பவர், டீ ஸ்டால் பேருந்து நிறுத்தம் என்ற பெயரில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட செங்குன்றம் பேரூராட்சி நிர்வாகத்தினர், செங்குன்றம் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையில், ஒட்டப்பட்டுள்ள தனிநபர் ஸ்டிக்கரை அகற்றிவிட்டு, செங்குன்றம் மார்க்கெட் பகுதி பேருந்து என ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களுக்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post செங்குன்றம் மார்க்கெட் பகுதியில் பேருந்து நிழற்குடையில் தனிநபர் ஸ்டிக்கர்: உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: