பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

 

ஆர்.கே.பேட்டை, அக். 21: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சி.பி.கண்டிகை கிராமத்தில் பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து விட்டு புதியதாக கட்டிடம் கட்டி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் எஸ். வி.ஜி.புரம் ஊராட்சியில் உள்ள சி.பி.கண்டிகை கிராமத்தில் ஊரக கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தின் கீழ் கடந்த 2013-2014ம் ஆண்டு அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.

இதில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இக்கட்டிடம் பழுதடைந்தது. நாளடைவில் அங்கன்வாடி மையத்தின் மேல் தளத்தில் மேல் பூச்சுகள் உதிர்ந்து பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. தற்போது இந்த கட்டிடம் சமையல் செய்ய போதிய வசதிகள் இல்லை பழைய கட்டடத்தையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் திறந்தவெளியில் சமையல் செய்து குழந்தைகளுக்கு வழங்குகின்றனர்.

மேலும் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்காக கட்டப்பட்ட கழிப்பறையும் பயன்படுத்த முடியாமல் புதர்கள் மண்டி காணப்படுகிறது.  இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், ஊராட்சி மன்ற தலைவரிடமும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே குழந்தைகள் நலன் கருதி புதிய அங்கன்வாடி மையம் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: