தமிழகம் முழுவதும் கடந்த 9 மாதங்களில் 4,430 போலி தொலைபேசி எண்கள் மூலம் சைபர் குற்றவாளிகள் பல கோடி மோசடி

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 9 மாதங்களில் சைபர் குற்றவாளிகள் 4,430 போலி தொலைபேசிகள் எண்கள் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மோசடிகளை தடுக்க தொலைதொடர்பு நிறுவன அதிகாரிகளுடன் சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை அதாவது 9 மாத காலங்களில் சைபர் குற்றவாளிகள் தங்களது மோசடிகளுக்கு 4,430 தொலைபேசி எண்களை தவறாக பயன்படுத்தி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் பறித்துள்ள சம்பவம் தற்போது தேசிய சைபர் க்ரைம் ரிப்போர்ட்டிங் போர்டு மூலம் வெளியாகி உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இதுபோன்ற போலி எண்கள் மூலம் பொதுமக்களை தொடர்பு கொள்ளும் அழைப்புகளை இடைமறித்து தடுக்கும் வகையில் இந்திய தொலைதொடர்பு துறை பல்வேறு சிறப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனால் சிஐஓஆர் சேவை இந்திய எண்களில் இருந்து வரும் போலியான அழைப்புகளை கண்டறிந்து, அந்த அழைப்பு பொதுமக்களை அடைவதற்கு முன்பே தடுத்து நிறுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை அசோக் நகரில் உள்ள மாநில சைபர் க்ரைம் தலைமை அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் தலைமையில் தொலைதொடர்பு துறை துணை இயக்குநர் சுதாகர் மற்றும் பிஎஸ்என்எல், தனியார் தொலைதொடர்பு துறை நிறுவனமாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களின் மண்டல அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களை தொடர்பு கொள்ளுவதற்கு முன்பே சைபர் குற்றவாளிகளை இடைமறித்து தடுக்க செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பெரும்பாலான போலி அழைப்புகள் வாட்ஸ் அப், ஸ்பைக், டெலிகிராம் போன்றவை மூலம் தொடர்பு கொள்ளும் மோசடி நபர்களை இடை மறித்து தடுக்க நடவடிக்கை எடுப்பதும் குறித்தும் விரிவாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

The post தமிழகம் முழுவதும் கடந்த 9 மாதங்களில் 4,430 போலி தொலைபேசி எண்கள் மூலம் சைபர் குற்றவாளிகள் பல கோடி மோசடி appeared first on Dinakaran.

Related Stories: