நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல்

புதுடெல்லி: காவிரி ஒழுங்காற்று குழுவின் 105வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. இதில் தமிழ்நாடு கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்கள் கானொளி வாயிலாக கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு தரப்பில் கலந்து கொண்ட திருச்சி சி.ஈ.தயாளகுமார், காவிரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரை கணக்கில் கொள்ளக் கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீர் பங்கீட்டை வழங்க வேண்டும். குறிப்பாக புதுவை மாநிலம் காரைக்காலுக்கு தமிழ்நாடு தரப்பில் வழங்கப்படும் நீரின் அளவை விட கூடுதலாகவே வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நடப்பாண்டு ஜூன் 1 முதல் அக்டோபர் 13 வரை உள்ள காலகட்டத்தில் உச்ச நீதிமன்ற ஆணையின்படி தரவேண்டிய 131.619 டி.எம்.சி. அடி நீருக்கு பதிலாக 215,586 டி.எம்.சி. பெறப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார். இதையடுத்து கர்நாடகா அரசு தரப்பு உறுப்பினர்கள்,\” மாநிலத்தில் இருக்கும் நீரின் வருகையை பொறுத்து தான் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து நீர் திறந்து விட முடியும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து இந்திய வானிலை ஆய்வுத்துறையின் உறுப்பினர். 2024-2025ம் ஆண்டின் தென் மேற்கு பருவ மழை ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை காவிரி படுகையில் இயல்பான அளவைவிட சற்று அதிகமான மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 15ம் (நேற்று) தேதி துவங்கியுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு காவிரி படுகையில் கனமழை பெய்ய வாய்புள்ளது என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநில உறுப்பினர்கள் தங்களது தரப்பு கோரிக்கையை முன் வைத்தனர்.

அனைத்தையும் பதிவு செய்து கொண்ட ஒழுங்காற்று குழு தலைவர், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கும் மற்றும் தமிழ்நாடு அரசு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் வழங்கப்பட வேண்டிய நீரினை மாதவாரியாக உச்ச நீதிமன்ற ஆணைப்படி இனிவரும் நாட்களில் அளிக்க வேண்டுமென்று அறிவுறித்தினார். அதன் பிறகு நிலைமையை அடுத்த கூட்டத்தில் ஆராயலாம் என்றும் தெரிவித்து, அடுத்த கூட்டத்தை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

The post நீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: