மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.17 கோடியில் வடிகால் பணி: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில், ரூ.17 கோடியில் வடிகால் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதாக, அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, ரூ.84 லட்சத்தில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை நேற்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். பின்னர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மற்றும் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கோயம்பேடு வணிக வாளாகத்தில் அமைக்கப்பட இருக்கும் மழைநீர் வடிகால் திட்ட பணியை பார்வையிட்டார்.

பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு மொத்த அங்காடியில் மழைநீர் தேங்காமல் தடுக்கும் வகையில், ரூ.17 கோடி செலவில் புதிய மழைநீர் வடிகால் அமைக்க டெண்டர் இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் ஏற்கனவே இருக்கின்ற 850 மீட்டர் நீளம் கொண்ட மழைநீர் கால்வாயை சீரமைக்கும் பணி விறு விறுப்பாக நடைபெறுகிறது. மழைக் காலத்தில் கோயம்பேடு அங்காடியில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு 60 எச்பி உயர்திறன் கொண்ட ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளேன். காய்கறி சந்தையில் மழைக் காலத்தில் தேங்கும் காய்கறி கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த கூடுதலாக 20 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். காய்கறி கழிவு மூலம் சுதாதார சீர்கேடு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

The post மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ரூ.17 கோடியில் வடிகால் பணி: அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: