வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை தடுத்து நிறுத்திய வளர்ப்பு பூனை: தாம்பரம் அருகே நெகிழ்ச்சி சம்பவம்

தாம்பரம்: வீட்டுக்குள் நுழைய முயன்ற 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை, வளர்ப்பு பூனை தடுத்து நிறுத்திய சம்பவம் தாம்பரம் அருகே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம், என்ஜிஓ நகரை சேர்ந்தவர் பெல்வில். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக லியோ என பெயரிடப்பட்ட பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் உள்ளிருந்து வெளியே வந்த பூனை, வீட்டு வளாகத்தில் உள்ள தோட்டத்தில் இருந்த செடிகளை பார்த்து ஆக்ரோஷமாக சீரியவாறு இருந்தது.

இதனை கண்ட பெல்வின் அருகில் சென்று பார்த்தபோது, அங்கே சுமார் 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று படம் எடுத்தவாறு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் கொடுத்தார். இதனிடையே, அந்த நல்ல பாம்பு வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தது. ஆனால், லியோ பூனையோ நல்ல பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் சீறியபடி தடுத்து நிறுத்தி, தனது உரிமையாளரையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாத்து கெத்தாக நின்றது. பின்னர் அங்கு வந்த பாம்பு பிடி வீரர், படம் எடுத்தவாறு இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து ஒரு பையில் அடைத்து தாம்பரம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். வளர்ப்பு பூனை லியோவின் இந்த செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பை தடுத்து நிறுத்திய வளர்ப்பு பூனை: தாம்பரம் அருகே நெகிழ்ச்சி சம்பவம் appeared first on Dinakaran.

Related Stories: