உலகிலேயே அதிவேகமாக சைக்கிள் பயணம்… சாதனை படைத்தப் பெண்!

உலகிலேயே அதிவேகமாக சைக்கிள் ஓட்டி வலம் வந்த பெண் என்ற புதிய சாதனையை படைத்திருக்கிறார் லாயல் வில்காக்ஸ் என்னும் பெண். அமெரிக்காவைச் சேர்ந்தவரான இவர், 26.169 கி.மீ (18,125 மைல்கள்) சைக்கிள் பயணம் மேற்கொள்ள 108 நாட்கள் 12 மணி நேரம், 12 நிமிடம் எடுத்துக்கொண்டுள்ளார். இதன்மூலம், 2018ஆம் ஆண்டு சைக்கிள் வீரர் ஜென்னி கிரஹாம் 124 நாட்களில் 11 மணி நேரங்களில் கடந்த தூரத்தை, தற்போது வில்காக்ஸ் முறியடித்துள்ளார். சிகாகோவில் தனது சைக்கிள் பயணத்தைத் தொடங்கி, நியூயார்க் வரை சென்றுள்ளார். நியூயார்க்கிலிருந்து போர்ச்சுகலுக்குச் சென்ற அவர், அங்கிருந்து நெதர்லாந்திற்குப் புறப்பட்டார். இறுதியில் ஜெர்மனி, ஆல்ப்ஸ், பால்கன், துருக்கி மற்றும் ஜார்ஜியா வழியாக நியூயார்க் திரும்பினார். கின்னஸ் விதிகளின்படி, சைக்கிள் வீரர் குறைந்தபட்சம் 18 ஆயிரம் மைல்கள் சைக்கிள் பயணம் மேற்கொள்ள வேண்டும். மேலும், அதே இடத்தில் தொடங்கவும் மற்றும் முடிக்கவும் வேண்டும். சாதனை குறித்து வில்காக்ஸ் கூறுகையில், ‘’சில நேரங்களில் நான் உலகம் முழுவதும் சவாரி செய்கிறேன் என்பதை மறந்துவிடுவேன். சைக்கிளில் ஏறி அமர்ந்துவிட்டால் போதும், பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். பயணத்தில் என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி’’ என்று கூறியுள்ளார்.

யார் இந்த வில்காஸ்:

வில்காக்ஸ் ஜூலை 18, 1986 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அலாஸ்கா, ஏங்கரேஜில் பிறந்தவர். அவர் 2008 ஆம் ஆண்டு புகெட் சவுண்ட் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் மற்றும் பிரெஞ்சு இலக்கியத்தில் பட்டம்
பெற்றார். வில்காக்ஸ் 2008 ஆம் ஆண்டு தனது 20 வயதில் சைக்கிள் ஓட்டத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவரும் அவரது அப்போதைய காதலரான நிக்கோலஸ் கார்மனும் சைக்கிளிலேயே உலகைச் சுற்றிப்பார்க்க முடிவு செய்தனர். மேலும் சில நல்ல திட்டங்களுக்காக பணம் வசூலிக்கும் வேலையில் இருவரும் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டனர். அவர்கள் வட அமெரிக்காவில் தொடங்கி, பின்னர் கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து, 100,000 மைல்கள் (160,000 கிமீ) வரை பதிவு செய்தனர்.வில்காக்ஸ் மற்றும் கார்மன் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு பிரிந்தனர். 2021 ஆம் ஆண்டு, வில்காக்ஸின் பல சவாரிகளை ஆவணப்படுத்திய புகைப்பட பத்திரிகையாளரான ருகிலே காலடிடே என்பவரை வில்காக்ஸ் மணந்தார். உலகில் எங்கே சைக்கிள் பந்தயம் என்றாலும் வில்காக்ஸ் பெயர் இடம்பிடிப்பதுடன் வெற்றியும் அவருக்கே உரியதாகவே மாறிவிடுகிறது. தற்போது கின்னஸ் சாதனையும் புரிந்து புதிய வரலாறு படைத்திருக்கிறார்.
– கவின்

The post உலகிலேயே அதிவேகமாக சைக்கிள் பயணம்… சாதனை படைத்தப் பெண்! appeared first on Dinakaran.

Related Stories: