மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

ஜோலார்பேட்டை: மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என அரசு பள்ளியில் ஆய்வு செய்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, நேற்று திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி வளாகத்தை பார்வையிட்டு தூய்மையாக உள்ளது கண்டு தலைமை ஆசிரியர்கள் இதேபோல் அனைத்து பள்ளிகளையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என பாராட்டி அறிவுறுத்தினார். பின்னர் எல்கேஜி, யுகேஜி வகுப்பு மாணவர்களிடம் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றின் வாசிப்பு திறனை அமைச்சர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, 3ம் வகுப்பு மாணவர்களிடம் திருக்குறளை சொல்லக் கேட்டு மாணவர்களை பாராட்டினார். பின்னர், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம்மிடம் பள்ளியின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் போன்றவற்றை கேட்டறிந்தார். தொடர்ந்து, திருப்பத்தூரில் உள்ள அரசினர் மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வகுப்பறைகள், சுற்றுச்சூழல் சுகாதாரம் போன்றவற்றை ஆய்வு செய்தார். பின்னர், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி பாடம் எடுத்துக்கொண்டிருந்த வகுப்பிற்கு சென்று ஆசிரியையை பாடம் நடத்தக்கூறி ஆய்வு செய்தார். அப்போது ஆசிரியை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுத்திருந்தார்.

தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவிகளிடம் பேசியதாவது: எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் நன்றாக படியுங்கள். இந்த 5 மாதம் வாழ்க்கையின் மிக மிக முக்கியமான மாதம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். நம் ஆசிரியர்கள் பாடம் நடத்தியதை, நம் பெற்றோர்கள் நம்மை ஆளாக்கியதை நிரூபிக்க வேண்டியது எதுவென்றால் இந்த 5 மாதங்கள் தான். நம் வீட்டில் உள்ளவர்கள் படி படி என்று திட்டுகிறார்கள் என்று நினைத்து கொள்ள வேண்டாம். 5 மாதம் மிக முக்கிய காலமாகும் நன்றாக படியுங்கள். நல்ல கல்லூரியில் சேருங்கள். நல்ல கல்லூரி என்று நான் சொல்வதற்கு காரணம் என்னவென்றால் கல்லூரியில் படிக்கும் போது கேம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வு பெற்று விடுவீர்கள். படித்து முடித்து வேலைக்காக நீங்கள் அலைய தேவையில்லை. அதனால் நல்ல கல்லூரியில் சேர வேண்டும் என்றால் இந்த 5 மாதம் மிக முக்கியம்.

இந்த பள்ளியில் தேசிய அளவில் ரக்பி, ஹாக்கி ஆகிய போட்டியில் மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர் என அறிந்தேன். கல்வியில் முக்கியத்துவம் செலுத்துவது போன்று விளையாட்டிலும் ஆர்வத்துடன் பங்கு பெற்று வெற்றி அடைய வேண்டும். இந்தப் பள்ளி இங்கு மட்டும் தெரியக்கூடாது. மாநில அளவில் தெரிய வேண்டும். அதற்காக நீங்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து விளையாட்டு போட்டியில் தேசிய அளவில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். ஆய்வின்போது திருப்பத்தூர் எம்எல்ஏ அ.நல்லதம்பி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புண்ணியகோடி, மாவட்ட கல்வி அலுவலர் வெங்கடேச பெருமாள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: