ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தரைமட்ட பாலத்தை உயர் மட்ட பாலமாக மாற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறப்புபொதுமக்கள் மகிழ்ச்சி.ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த ஜனவரி 5ம் தேதி இரவு சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தொடர்மழை பொழிவு ஏற்பட்டது. மேலும் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 82 மி.மீ மழைப்பொழிவு பதிவானது. இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆறுகள், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம், சத்திரப்பட்டி, வாகைகுளம்பட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் இருந்து அதிகளவு உபரிநீர் வெளியேறி வாகைகுளம் பட்டியில் உள்ள தரைமட்ட பாலத்தின் வழியாக வெளியேறி வந்தது.
திடீரென அதில் அடைப்பு ஏற்பட்டு மழை நீரானது தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தது மட்டுமின்றி வாகைகுளம்பட்டி ஊருக்குள் புகுந்தது. 35க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் இக்கிராமம் வழியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் செல்ல முடியாமல் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. எனவே அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் மழைக்காலங்களில் கண்மாய்களுக்கு செல்லும் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகாதவாறு தரைமட்ட பாலமாக இருக்கும் வாகைகுளம்பட்டி பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி தலைமையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர். இதன்பிறகு உதவிக் கோட்ட பொறியாளர் ஆறுமுகம் மற்றும் உதவி பொறியாளர் உமாதேவி தலைமையில் சுமார் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பாலம் வேலைகள் முடிவடைந்து மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.இதன் காரணமாக மழைக்காலங்களில் பெரும் இன்னலுக்கு ஆளான கிராமமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
The post ரூ.1.75 கோடி மதிப்பில் பணிகள் நிறைவு உயர்மட்ட பாலமாக மாறியது தரைமட்ட பாலம் appeared first on Dinakaran.