காலி இடங்களுக்கு பணியாளர்கள் நியமிக்காததால் அங்கன்வாடி கூடுதல் பொறுப்பு மையங்களின் சாவி ஒப்படைப்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் அறிவிப்பு

 

புதுக்கோட்டை,அக்.9: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊழியர் இல்லாமல் காலியாக உள்ள அங்கன்வாடி மையங்களின் சாவிகளையும் அவற்றுக்கான கைப்பேசிகளையும் கூடுதல் பொறுப்பு பார்க்கும் பணியாளர்கள் வரும் 15ம் தேதி ஒப்படைப்போம் என தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் மாநிலப் பொருளாளர் தேவமணி, மாவட்ட தலைவர் விஜயலெட்சுமி மற்றும் நிர்வாகிகள் வெளியிட்ட கூட்டறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மொத்தம் 1799 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர் பணியிடங்கள், 600-க்கும் மேற்பட்ட உதவியாளர் பணியிடங்கள், 100-க்கும் மேற்பட்ட குறு மையப் பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை அரசு நிரப்பாததால் ஒரு பணியாளர், கூடுதலாக 2 மையங்களையும் கவனித்துக் கொள்ளும் சூழல் பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதனால் ஊழியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியவில்லை. எனவே, வரும் 15ம் தேதி கூடுதல் பொறுப்பாக பார்க்கும் மையங்களின் சாவிகளையும், அவற்றுக்கான கைப்பேசிகளையும் அந்தந்தப் பகுதி வட்டார அலுவலர்களிடம் ஒப்படைக்கவுள்ளோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

The post காலி இடங்களுக்கு பணியாளர்கள் நியமிக்காததால் அங்கன்வாடி கூடுதல் பொறுப்பு மையங்களின் சாவி ஒப்படைப்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: