பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் புகார்களுக்கு இடமளிக்காமல் பணிபுரிய வேண்டும்: அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தல்

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து உயர் அலுவலர்களுடன் அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் அதிகாரிகள் பணிபுரிய வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் 2024-25ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் மற்றும் இத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு கடனுதவி திட்டங்கள் உரிய முறையில் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் திட்டங்களை எவ்வித தொய்வும் ஏற்படாத வண்ணம் செயல்படுத்திடுமாறும், அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி விடுதிகளை நன்முறையில் பராமரிப்பு செய்து மாணவர்கள் தங்கும் வகையில் உகந்த சூழலை உருவாக்குமாறும், எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் பணிபுரிய வேண்டும் என்றும் அமைச்சர் கூட்டத்தில் பேசுகையில் கூறினார். ஆய்வு கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளர் விஜயராஜ்குமார், கூடுதல் செயலாளர் சுரேஷ்குமார், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் வெங்கடேஷ், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் சம்பத் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வுக் கூட்டம் புகார்களுக்கு இடமளிக்காமல் பணிபுரிய வேண்டும்: அமைச்சர் மெய்யநாதன் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: