பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: அமைச்சர் சா.மு.நாசர் வேண்டுகோள்

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராசன், துரை சந்திரசேகர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.நிவாசபெருமாள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஆவடி ஐமன் ஜமால், செங்குன்றம் கே.பாலகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், ஆவடி மாநகராட்சி துணை ஆணையர் சங்கரன் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கி கூறியதாவது; திருவள்ளூர் மாவட்டத்தில் ‘’வருமுன் காப்போம்’’ என்ற அடிப்படையில் பேரிடரை அனைத்து துறை அலுவலர்களும் கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட அனுபவங்களை பாடமாக எடுத்துக் கொண்டு பேரிடர் பணி மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை ஒரு வாரத்திற்குள் தொடங்க இருப்பதால் உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்து துறை அலுவலர்களும் மழைக்கால் வடிகால் பணி, மின் வயர் கேபிள், ஊராட்சிப் பகுதிகளில் உள்ள வடிகால் பணி, தூர்வாருதல், போன்ற பல்வேறு பணிகள், மற்றும் ஏரிகளில் உள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணி, குடிநீர் மோட்டார் பம்ப்செட்டுகள், வெள்ள பாதிப்பு பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து பொதுமக்களை மீட்க படகுகளை தயார் நிலையில் வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும். செல்போன் மற்றும் லேண்ட்லைன் தடை படும் பொழுது வாக்கி டாக்கி போன்ற வயர்லெஸ் கருவிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான ஒரு பேரிடர் மீட்புக் குழு அமைத்து செயல்பட வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் வாட்ஸ் அப் குழு அமைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து வரும் தகவல்களை உள்வாங்கி பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் உள்ள நீர் நிலைகளில் உள்ள வடிகால் கால்வாய்களை சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ள வேண்டும். சுகாதார ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மருந்து மற்றும் தடுப்பூசிகள் தயார் நிலையில் வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார். திருத்தணி தீ விபத்தில் உயிரிழந்த குடும்பத்தின் வாரிசுதாரான பார்வதியிடம் ரூ.3 லட்சத்துக்கான காசோலையும் சுபாஷினிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் கோரமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி மோட்டார் பொருத்திய தையல் இயந்திரத்தினை அமைச்சர் வழங்கினார்.

The post பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: அமைச்சர் சா.மு.நாசர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: