கடந்த அதிமுக ஆட்சியின் போது அதிமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த விஜயநல்லதம்பி, ஆவினில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்றதாக தெரிகிறது. இதேபோல் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம் ரூ.30 லட்சம் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது. ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ரவீந்திரன் புகார் அளித்தார். இதன்பேரில் கடந்த 2022ல் விஜய நல்லதம்பியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஆவினில் வேலை தருவதாக ரவீந்திரன் உள்பட பலரிடம் ரூ.3 கோடி பணம் வாங்கி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் அளித்ததாக தெரிவித்தார்.
இவரது தகவலின்பேரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். இதேபோல் ரூ.30 லட்சம் மோசடி வழக்கில் விஜயநல்லதம்பியும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தார். இந்நிலையில், நிபந்தனைகளை மீறியதால் உச்சநீதிமன்றம் கடந்த செப். 19ல் விஜயநல்லதம்பிக்கு வழங்கிய ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் தலைமறைவானார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் நண்பர் வீட்டில் விஜயநல்லதம்பி பதுங்கியிருப்பதாக நேற்று மாலை தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.
The post ரூ.30 லட்சம் மோசடி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த சீமானின் சின்ன மாமனார் கைது appeared first on Dinakaran.