கொச்சி நட்சத்திர ஓட்டலில் தாதா நடத்திய போதை பார்ட்டியில் பங்கேற்ற நடிகர் நாத் பாசி, நடிகை பிரயாகா: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல தாதாவான ஓம் பிரகாஷ் மீது 30க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி உள்பட கிரிமினல் வழக்குகள் உள்ளன. பிரபல நிதி நிறுவனமான முத்தூட் அதிபர் பால் முத்தூட்டை கொலை செய்த வழக்கும் இவர் மீது உள்ளது. இந்நிலையில் ஓம் பிரகாஷ் உள்பட ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொச்சியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் போதை பார்ட்டி நடத்துவதாக கொச்சி போதைப்பொருள் தடுப்புத் துறை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த ஓட்டலில் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது பிரபல தாதாவான ஓம் பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளியான கொல்லத்தைச் சேர்ந்த ஷிஹாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பின் போலீசார் இருவரையும் நேற்று கொல்லம் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது இருவரையும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருந்தது: ஓம் பிரகாஷ் மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் கொச்சியிலுள்ள ஓட்டலில் ஒரு பார்ட்டி நடத்தியுள்ளனர்.

இதில் போதைப் பொருள் பரிமாறப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளது. இந்தப் பார்ட்டியில் பிரபல மலையாள நடிகர் நாத் பாசி, நடிகை பிரயாகா மாட்டின் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து இவர்கள் அனைவரிடமும் விசாரிக்க வேண்டி உள்ளது.எனவே ஓம் பிரகாஷ் மற்றும் ஷிஹாசை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. ஆனால் போலீசின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதற்கிடையே போதை பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகர் ஸ்ரீநாத் பாசி மற்றும் பிரயாகா மார்ட்டினிடம் விசாரணை நடத்த போலீசார் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் நாத் பாசி மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை பிரயாகா மார்ட்டின் தமிழில் பிசாசு, களத்தில் சந்திப்போம் உள்பட படங்களில் நடித்துள்ளார்.

 

The post கொச்சி நட்சத்திர ஓட்டலில் தாதா நடத்திய போதை பார்ட்டியில் பங்கேற்ற நடிகர் நாத் பாசி, நடிகை பிரயாகா: போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Related Stories: