ஏழாயிரம்பண்ணை, அக்.7: வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. வெம்பக்கோட்டை ஒன்றியம் தாயில்பட்டி அருகே உள்ள மண்குண்டாம்பட்டியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்டிடங்கள், அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்கள், நத்தம் புறம்போக்கு உள்ளிட்ட இடங்களில் கட்டப்பட்ட வீடுகள், தாழ்வாரம், தகர செட்டு, காம்பவுண்டு, முள்வேலி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்ற வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க போவதாக அறிவிக்கப்பட்டது.
அதன் பேரில் ஆக்கிரமிப்பில் இருந்த சிலர் தாங்களே அமைத்த முள்வேலிகளை அகற்றினர். மற்றவர்கள் கட்டிடங்களை அப்புறப்படுத்த முன்வராததால் குடிமைப் பொருட்கள் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்பட்டன. எனவே ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடம், மயானத்திற்கு செல்லும் வழி மற்றும் பொது வழிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களும் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
சிவகாசி வட்டாட்சியர் லிங்கம் தலைமையில், சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரெண்டு நாகராஜ், வெம்பக்கோட்டை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர். மேலும் பாதுகாப்பிற்காக வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
The post வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.