ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள்

 

ஆர்.எஸ்.மங்கலம், அக்.7: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே கடலூர் ஊராட்சிக்கு உட்பட்ட உப்பூர்,மோர்ப்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நாகனேந்தல், காவனூர், அத்தானூர்,அடந்தனார் கோட்டை, ஊரணங்குடி, வெட்டுக்குளம், சித்தூர்வாடி உள்ளிட்ட இப்பகுதி அதிகமான மக்கள் தொகை கொண்டதாகும். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அருகில் மருத்துவ வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைவருக்கும் முதல் உதவி செய்வதற்கு கூட அருகில் மருத்துவமனை இல்லை. கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சாலை விபத்தில் சிக்கியவர்களை கூட அவசர கால சிகிச்சைக்கு ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய சூழ்நிலை தான் உள்ளது. எனவே இந்த நிலையை மாற்றும் விதமாக உடனடியாக உப்பூர் பகுதியில் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்து தரவேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

The post ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: