இந்நிலையில், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 51 சென்ட் நிலத்தை எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் புகாரின்பேரில் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் மீட்கப்பட்டு அங்கு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் திருவள்ளூர், ராஜாஜி சாலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடங்களின் கட்டுமான பணிகளை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், சக அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதலமைச்சராக எங்களுக்கான கண்காணிப்பு அதிகாரியாக பதவியேற்றுள்ளார். அவரது நண்பனாகவும், கட்சி தொண்டனாகவும் பெருமைப்படுகிறேன். துணை முதலமைச்சராக அவர் வேகம் எடுக்கிறார். அவர் வேகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் நாங்களும் உழைத்துக்கொண்டு இருப்போம். கல்விக்கான நிதியை ஒதுக்கக்கோரி ஒன்றிய அரசிடம் துறையின் அமைச்சராக 2 முறை வலியுறுத்தினேன். முதலமைச்சரும் நேரிலும் சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளார்.
கல்விக்கான நிதி ஒதுக்குவதில் தயவுசெய்து ஒன்றிய அரசு அரசியல் பார்க்கக்கூடாது. 45 லட்சம் மாணவர்களின் எதிர்காலம், 15 ஆயிரம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம், 32,298 ஊழியர்களின் எதிர்காலம் என எல்லாவற்றையும் வலியுறுத்தி உள்ளோம். ஆனால் ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையிலே பிடிவாதமாக உள்ளது. நாம் என்றுமே மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாத மாநிலமாக இருந்து வருகிறோம். அத்தகைய கொள்கை பிடிப்போடுதான் தமிழக முதலமைச்சரும் இருந்து வருகிறார் என்றார். இந்த ஆய்வின்போது எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், நகர்மன்றத் தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் சி.சு.ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் ஏ.திருநாவுக்கரசு மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
The post துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் நண்பனாகவும், கட்சி தொண்டனாகவும் பெருமைப்படுகிறேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி appeared first on Dinakaran.