திருவாரூர், செப்.27: தமிழ்நாடு மத்தியப்பல்கலைக்கழகத்தில் சீர்மரப்பினர் மாணவர்களுக்காக இந்திய குடிமைப்பணி தேர்விற்கான இலவச பயிற்சி மையத்தினை துணை வேந்தர் கிருஷ்ணன் துவக்கிவைத்தார். திருவாரூர் அருகே நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறை சார்பில் இயங்கி வரும் இந்த பல்கலைக்கழகமானது கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தின்போது அப்போதைய முதல்வரான மறைந்த கருணாநிதி பெரும் முயற்சியின் காரணமாக தமிழகத்தில் இந்த பல்கலைகழகம் அமைவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. பின்னர் ரூ ஆயிரம் கோடி மதிப்பில் துவங்கப்பட்ட இந்த பல்கலைகழகத்தை கடந்த 2009ம் ஆண்டில் கருணாநிதி முன்னிலையில் அப்போதைய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த கபில்சிபில் திறந்துவைத்தார்.
இதனையடுத்து தற்போது 15 ஆண்டுகள் கடந்துள்ள இந்த பல்லைகழகத்தில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஓரிசா, பீகார் உள்ளிட்ட இந்தியா முழுவதும் இருந்து வரும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 750 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் 5 வருட படிப்பாக எம்.எஸ்.சி இயற்பியல், வேதியல், கணிதம், பயோ டெக்னாலஜி மற்றும் எம்.ஏ பொருளாதாரம் மற்றும் பிஎஸ்.சி, பி.எட் (கணிதம்) உட்பட பல்வேறு பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருவதையொட்டி துணை வேந்தர் கிருஷ்ணன் உட்பட 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த பல்கலைகழகத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக ஏற்கனவே இந்திய குடிமைபணி தேர்விற்கான இலவச பயிற்சி மையம் நடைபெற்று வருகிறது.
தற்போது சீர்மரப்பினர் மாணவர்களும் பயனடையும் வகையில் இலவச பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது. இதனை துவக்கி வைத்து பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் பேசுகையில்: மத்திய பல்கலைக்கழகம் கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்களை எடுத்து வருகிறது. மேலும் மாணவர்களின் வாழ்க்கை தரத்தையும் ,பொருளாதார நிலையும் உயர்த்தும் வகையில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மட்டுமின்றி தற்போது சீர்மரப்பினர் மாணவர்களுக்காகவும் இந்திய குடிமைப்பணி தேர்விற்கான இலவச பயிற்சி மையம் அனைத்து வசதிகளுடன் துவங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் இப்பயிற்சி மையத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தி குடிமைப்பணி அலுவலர்களாக வரவேண்டும். என்றார்,
நிகழ்ச்சியில் பல்கலைகழகத்தின் பதிவாளர் திருமுருகன், நூலகர் முனைவர் பரமேஸ்வரன், குடிமைப்பணி பயிற்சி மைய பொறுப்பாளர் பேராசிரியர் செல்வம், ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் வேலுமணி, பேராசிரியர் பூபதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
The post இந்திய குடிமைப்பணி தேர்விற்கு இலவச பயிற்சி மையம்: மாணவர்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும் appeared first on Dinakaran.