இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்போர் அவதி அடைந்தனர். திருத்தணியில் ம.பொசி. சாலை, பழைய பஜார் தெரு, மருத்துவமனை சாலை, காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் மழை நீர் மற்றும் கழிவு நீர் சாலைகளில் தேங்கி நின்றதால் அங்கு வாகன சேவை பாதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை பகுதியிலும் சுமார் 1 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக மின்சாரம் தடைப்பட்டது.
சுரங்கப் பாதையில் தேங்கி இருக்கும் மழை நீரை மின் மோட்டார்கள் மூலம் அகற்றும் பணியில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி உத்தரவின்பேரில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் செங்குன்றம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக, புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. செங்குன்றம், சோழவரம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றத்தில் 7 செமீ, சோழவரத்தில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதில், புழல் ஏரியில் நேற்று முன்தினம் 140 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 707 கன அடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 2197 மில்லியன் கன அடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 15.87 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. இதனால், புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல, 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 62 மில்லியன் கனஅடியாக உள்ளது. 18.86 அடி உயரத்தில் தற்போது 0.23 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. சோழவரம் ஏரிக்கு 11 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. தொடர் மழை நீடிக்கும் பட்சத்தில் ஏரிகளில் நீர் இருப்பு மெல்ல அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர், ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக. பல்வேறு நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. அந்த வகையில் ஆவடி பகுதியில் பெய்த கன மழை காரணமாக பருத்திப்பட்டு ஏரி நிரம்பியது. இதன் காரணமாக நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியிலிருந்து 100 கன அடி நீரை வெளியேற்றினர். வெளியேற்றப்படும் உபரிநீர் அதன் தொடர் இணைப்பில் உள்ள அயப்பாக்கம் ஏரிக்கு வந்தடைந்து. இதனால் அயப்பாக்கம் ஏரியும் நிரம்பி அம்பத்தூர் ஏரிக்கு உபரி நீர் செல்கிறது. அயப்பாக்கத்தில் 13.4 செமீ மழை பதிவாகியது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் செங்குன்றத்தில் 7 செமீ, சோழவரத்தில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
* பாதாள சாக்கடை திட்டம் நிறைவு – கலெக்டர் பேட்டி
ஆவடி பகுதியில் 13 செமீ மழை வெளுத்து வாங்கியதையடுத்து சேக்காடு ரயில்வே சுரங்கப்பாதை மூழ்கியது. நேற்று திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், நேற்று காலை முதல், ஆவடி மாநகராட்சி கமிஷனர் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடி களஆய்வு மேற்கொண்டு, மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார். இதனால், ஆவடியில் பல்வேறு இடங்களில் தேங்கிய மழைநீர் தற்போது வடிந்துள்ளது. சேக்காடு சுரங்கபாதையில் மட்டும் மழை நீர் தேங்கியுள்ளது. அதனை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகிறது. வரும் மழைக்காலங்களில் இங்கு மழைநீர் தேங்காமல் இருக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதித்தோம். விரைவில், தற்காலிக தீர்வு ஏற்படுத்தப்பட்டு, அடுத்த கனமழைக்குள் வெள்ள பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆவடி மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை சார்பில் பல்வேறு வெள்ளத்தடுப்பு பணிகள் நடந்து வருகிறது. அவற்றில் பெருபாலான பணிகள் முடிந்துள்ளன. இதனால், மழைநீர் தேங்கும் இடங்களில் கூட வெள்ளபாதிப்பு ஏற்படாததை காண முடிகிறது. ஒரே நேரத்தில் அதிகபட்ச மழை பெய்யும்போது, வெள்ளம் தேங்குவதை தவிர்க்க முடியாது. ஆனால் வடியச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆவடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பெரும்பாலான வார்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணியும் நடந்து வருகிறது. பொதுமக்கள் தாமாக முன்வந்து ஆர்வத்துடன் இணைப்பு கொடுக்கும்போது, கழிவுநீர் பாதுகாப்பாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 2021ல் தான் பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டு, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை பணிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் துவங்க உள்ளன. இவை அனைத்தும் முடியும்போது, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலக்கும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார்.
The post சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் புழல், சோழவரம் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு: அதிகபட்சமாக ஆவடியில் 13 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.