தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

காலாப்பட்டு, செப். 25: புதுவை காலாப்பட்டில் மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் நடத்திய திடீர் சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சேரி காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தொகுதி எம்எல்ஏ கல்யாணசுந்தரம் தலைமையில் பூமிபூஜை துவங்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிந்தும் தூண்டில் வளைவு அமைக்கும் பணி தொடங்கவில்லை. கடந்த 4 மாதமாக கிடப்பில் போடப்பட்டு பணிகள் எதுவும் துவக்கப்படாமல் இருந்தது.

இதற்கிடையே பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, கனகசெட்டிகுளம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் கருங்கல் கொட்டி தூண்டில் வளைவு அமைக்கும் பணியை உடனே தொடங்கக்கோரி காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 4 மீனவ கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீனியர் எஸ்பி நாரா சைதன்யா, எஸ்பிக்கள் லட்சுமி சவுஜன்யா, வீரவல்லவன், இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், கணேசன் மற்றும் போலீசார், மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மீனவர்கள் கலைந்து போக மறுத்து, மீன்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, மீனவர்களிடம் தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம், உழவர்கரை தாசில்தார் ராஜேஷ் கண்ணா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே வெளியிட்ட டெண்டரில் யாரும் பங்கேற்காததால் பணியை துவங்கவில்லை. மீண்டும் வரும் 27ம் தேதி மறு டெண்டர்கள் திறக்கப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்ற மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மீனவர்களின் சாலை மறியலால் சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: