சென்னை மண்டலத்துக்கு எச்.ராஜா, விழுப்புரம் மண்டலத்துக்கு துணை தலைவர் சக்கரவர்த்தி, மதுரை மண்டலத்துக்கு ராம சீனிவாசன், திருச்சி மண்டலத்துக்கு கருப்பு முருகானந்தம், கோவை மண்டலத்துக்கு எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மேற்பார்வையில் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும். ஒவ்வொரு பூத்திலும் குறைந்தபட்சம் 200 பேரை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில் தீவிர உறுப்பினராக சேரக் கூடியவர்கள் 50 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கைக்காக பாஜவினர் வீடு வீடாக செல்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் உறுப்பினர் சேர்க்கைக்கான மிஸ்டு கால் செல்போன் எண்ணும் வழங்கப்பட்டது. ஆனால், இந்த உறுப்பினர் சேர்க்கை என்பது தமிழக பாஜக எதிர்ப்பார்த்தது போல நடக்கவில்லை. மாறாக பாஜவில் இணைய யாரும் ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொற்ப அளவிலேயே அதாவது, 5 லட்சம் பேர் மட்டுமே பாஜகவில் இதுவரை இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கை தொடங்கி இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டாலும் குறைந்த அளவில்தான் உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது. இதனைப் பார்த்து தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
உறுப்பினர் பட்டியலை வைத்துக் கொண்டு பாஜ நிர்வாகிகளை அரவிந்த் மேனன் சாடியதாக கூறப்படுகிறது. சொற்ப அளவிலான உறுப்பினர்களைதான் உங்களால் சேர்க்க முடியுமா?. அந்த அளவுக்குத்தான் தமிழ்நாட்டில் செல்வாக்கு உள்ளதா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு பாஜ நிர்வாகிகளை வறுத்து எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தமிழக பாஜவில் 30 லட்சம் உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது அந்த இலக்கைக் கூட பாஜவால் எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த உறுப்பினர்களை கூட உங்களால் புதுபித்து சேர்த்து கொள்ள முடியாதற்கு என்ன காரணம் என்று கேட்டும் தனது கடுமையான வார்த்தைகளால் நிர்வாகிகளை அரவிந்த் மேனன் எச்சரித்ததாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் புலம்பியதை பார்க்க முடிகிறது.
மேலும் போதிய அளவு உறுப்பினர் சேர்க்கை நடைபெறாததால் உறுப்பினர் சேர்க்கையை அடுத்த மாதம் 15ம் தேதி வரை நீட்டிக்க டெல்லி மேலிடத்திடம் அவகாசம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் இலக்கை அடைய வேண்டும். இல்லாத பட்சத்தில் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை பாஜவில் சேர யாருக்கும் விருப்பமில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக இளைஞர்கள் பாஜவில் சேர எந்த ஒரு ஆர்வமும் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை ஒதுக்காமல் வஞ்சித்து வருவது உறுப்பினர் சேர்க்கையை பேசும் பொருளாகியுள்ளது.
மக்களை வஞ்சிக்கும் கட்சியில் எப்படி சேர முடியும் என்பது ஒவ்வொருவரின் கேள்வியாக உள்ளது. இதுவே உறுப்பினர் சேர்க்கைக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் பணிக்கு ஆட்களை தேர்வு செய்தது, சம்பந்தமே இல்லாதவர்களை தேர்தல் பணியாற்ற வைத்தது, செலவுக்கு பணம் கொடுத்ததில் ஏற்பட்ட குளறுபடிகள் போன்ற காரணங்களால் பாஜவினர் பலர் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்த முடியாத நிலைதான் இன்னும் இருந்து வருகிறது. இதுவும் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சினிமா படப்பாணியில், யாருமே இல்லாத கடையில் யாருக்கு டா டீ ஆத்துற. உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா என்று நெட்டிசன்கள் பாஜவை வறுத்தெடுத்து வருகின்றனர். இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
புதுச்சேரியில் 2 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் 5 நபர்கள் கட்சி கொடி எதுவும் இன்றி தனியார் அறக்கட்டளையில் இருந்து வருகிறோம் என்று சொல்லி கடந்த சில தினங்களாக வீடுவீடாக சென்று பொதுமக்களிடம் செல்போன் நம்பர்களை வாங்கிச் சென்றுள்ளனர். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கிப்ட் தருவோம் எனக் கூறவே தங்களின் போன் நம்பர்களை கொடுத்ததோடு ஓடிபி உள்ளிட்ட தகவல்களையும் தெரியப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் நேற்று அவர்களது செல்போன் நம்பருக்கு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் தாங்கள் பாஜவில் இணைந்து விட்டதாக கூறப்பட்டிருந்ததால் அதிர்ச்சியில் உறைந்தனர்.
The post ஒரு கோடி இலக்காம்… சேர்ந்ததோ வெறும் அஞ்சு லட்சம்தானாம்… தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கையில் கடும் பின்னடைவு: இளைஞர்கள் பெயரளவுக்கு கூட திரும்பிப் பார்க்கவில்லை; பாஜ மேலிட பொறுப்பாளர் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.