* அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி சவால்
புதுக்கோட்டை: பாஷா இறுதி ஊர்வலத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்ததில் தவறில்லை. கேடிகள், ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு பதவி கொடுத்து வைத்திருக்கும் கட்சி பாஜ. வேண்டுமென்றால் மீண்டும் பட்டியல் வெளியிட தயார் என்று அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி சவால் விட்டுள்ளார். புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகரில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் பணியை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் பாரபட்சம் பார்க்க முடியாது. யாருடைய இறுதி ஊர்வலத்தில் அதிக அளவு கூட்டம் இருந்தாலும் அங்கு காவல்துறையினர் இருக்க வேண்டியது அவசியம் தான். அதேபோல் பாட்ஷாவின் இறுதி ஊர்வலத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக காவல் துறையினர் பாதுகாப்பு போடுவது அவசியம் தான்.
அதில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை. சமூக விரோதிகளுக்கும் பல்வேறு வழக்குகளில் சிக்கி இருக்கின்றவர்களுக்கும் கேடிகள் பட்டியலில், ரவுடிகள் பட்டியலில் இருப்பவர்களுக்கும் பதவிகளை கொடுப்பதும் கட்சிகளில் சேர்த்துக் கொள்வதும் அகில இந்திய அளவில் பாஜவை தவிர வேறு எந்த கட்சியும் இல்லை. இதற்கு ஏற்கனவே பலமுறை ஆதாரத்தோடு பெயர் பட்டியலோடு நிரூபித்து இருக்கின்றோம். வேண்டுமென்றால் மீண்டும் ஒரு பெயர் பட்டியலை தர தயாராக இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
* அமித்ஷாவை கண்டிக்காத அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு பதவி எதற்கு?
பாஜவினர் எழுச்சியுடன் உள்ளனர். ஆயுதத்தை எடுக்க கூடாது என்று அண்ணாமலை பேசியுள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, பாஜ ஆயுதத்தை எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் எங்களுக்கு கவலை கிடையாது. அவர்கள் எப்போதும் ஆயுதத்தை கையில் வைத்துள்ளவர்கள் என்பது நாடறிந்த உண்மை. அதைப் பற்றி நாங்கள் கவலைப்பட போவதில்லை. திமுகவை பொறுத்தவரை நாங்கள் அமைதி வழியில் செல்ல தான் விரும்புகிறோம்.
மக்களை சந்தித்து மக்களுக்கான ஆட்சியை தருவது தான் எங்கள் தலைவரின் விருப்பம். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறும் எடப்பாடி பழனிசாமி இந்தியாவுக்கே பொதுவான அம்பேத்கரை பற்றி அமித்ஷா கூறியதைப் பற்றி கேட்டால் ஜெயக்குமார் பேசிய கருத்துதான் எனது கருத்து என்கிறார். அப்படி கூறுவதற்கு பொதுச்செயலாளர் பதவி எதற்கு. டிடிவி தினகரன், அதிமுக, பாஜ கூட்டணிக்கு வந்தால் தான் கட்சி அழியாமல் இருக்கும் என்று கூறிய விவகாரத்தில் அது அதிமுகவுக்கு எச்சரிக்கையாகவும் பயமுறுத்துவதற்காகவும் இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* ‘ஆளுநர் கூறும் நபரை நியமிக்க முடியாது’
அமைச்சர் ரகுபதி கூறுகையில், பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநர் அவருக்கு பிடித்தபடி செய்ய வேண்டும் என்று கூறினால் அதற்கு நாங்கள் ஆள் கிடையாது. நாங்கள் சட்டப்படி செய்கிறோம். சட்டப்படி அது இல்லை என்றால் யார் வேண்டுமென்றாலும் நீதிமன்றத்திற்கு செல்லலாம். மூன்று பேர் கொண்ட தேடுதல் குழு தான் அமைக்க முடியும். ஆளுநர் நான்காவதாக யுசிஜியிலிருந்து ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். ஆனால் நாங்கள் இதுவரை அப்படி யாரையும் சேர்க்கவில்லை. புதிதாக அப்படி யாரையும் சேர்க்க முடியாது என்பதுதான் எங்களது வாதம்.
இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்லும் போது எங்கள் வாதத்தையும் நியாயத்தையும் எடுத்து வைப்போம். ஆடுற மாட்டை ஆடி கறக்க வேண்டும் பாடுற மாட்டை பாடி கறக்க வேண்டும் என்ற கதையாக ஆளுநரை பற்றி பேசிக்கிட்டே போகலாம். ஆனால் அதற்கு தற்போது வேலை இல்லை. நாங்கள் ஆளுநரை மாற்ற சொல்லும் கோரிக்கையை வைக்க மாட்டோம். ஆளுநரோடு வார்த்தை மோதல் இருப்பது இயற்கை. இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் என்ன கருத்துக்களை வேண்டுமென்றாலும் கூறலாம். அதில் ஏதும் தவறு கிடையாது. நாங்கள் ஆளுநர் மாறிவிட்டார் என்று நினைக்கவில்லை என்றார்.
The post பாஷா இறுதி ஊர்வலத்துக்கு பாதுகாப்பு அளித்ததில் தவறில்லை கேடிகள், ரவுடிகள், சமூக விரோதிகளுக்கு பதவி கொடுத்து வைத்திருக்கும் கட்சி பாஜ appeared first on Dinakaran.