இந்திய அரசியலமைப்பை ஏற்காதவர் இந்திய குடிமகனாக இருக்க‌ முடியாது: முன்னாள் நீதிபதி பரபரப்பு பேச்சு

சென்னை: இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாத ஒருவரும் இந்திய குடிமகனாக இருக்க‌ முடியாது என்று நூல்கள் வெளியீட்டு விழாவில் முன்னாள் நீதிபதி ஜோதிமணி பேசினார். தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராஜம் எம்பி நாதன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா மயிலாப்பூர் சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடந்தது. விழாவுக்கு, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்து, ராஜம் எம்பி நாதன் எழுதிய, ‘அடிப்படை சுதந்திரங்கள், பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், இந்திய அரசியலமைப்பு சட்டம் சிறப்பும் பொறுப்பும்’ ஆகிய 3 நூல்களை வெளியிட்டார். இந்த நூல்களை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி பெற்றுக் கொண்டார். விழாவில் ஜி.கே.வாசன் பேசுகையில், ‘‘இந்த புத்தகங்களை வழக்கறிஞர்கள் தான் படிக்க வேண்டும் என்பது கிடையாது. அனைவரும் படித்து இந்திய அரசியலமைப்பின் சாராம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நூல்களை அவர் மேலும் எழுத வேண்டும் என்றார்.

தொடர்ந்து, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஜோதிமணி பேசுகையில், ‘‘இந்த புத்தகங்கள் பொதுமக்களுக்கு சென்று சேர வேண்டும். இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளாத ஒருவரும் இந்திய குடிமகனாக இருக்க‌ முடியாது. கடமையையும் உரிமையையும் இந்திய அரசியலமைப்பு கொடுத்துள்ளது. இதுபோன்ற புத்தகங்கள் பொதுமக்களுக்கும், நாளைய தலைமுறையிலான மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டும்’’ என்றார். விழாவுக்கு ஜி.கே.எம் அரிமா சங்க முதன்மை தலைவரும் தமாகா பொதுச் செயலாளருமான ஜி.ஆர்.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் விடியல் சேகர், முனவர் பாட்சா, பொதுச் செயலாளர்கள் திருவேங்கடம், ஜவஹர் பாபு, மகளிர் அணி தலைவி ராணி கிருஷ்ணன், பி.எஸ்.அப்துல் ரகுமான், கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன பதிவாளர் ராஜா உசேன், கிரசன்ட் சட்டப் பள்ளி பேராசிரியர் சி.சொக்கலிங்கம், இணை பேராசிரியர் மு.அ.சலீம் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post இந்திய அரசியலமைப்பை ஏற்காதவர் இந்திய குடிமகனாக இருக்க‌ முடியாது: முன்னாள் நீதிபதி பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: