நெல்லை கொலை சம்பவத்தில் 2 மணிநேரத்தில் 4 பேர் கைது அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்பட்டதை மறந்து விட்டீரா? எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி

சென்னை: திருநெல்வேலி கொலை சம்பவத்தில் இரண்டே மணி நேரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்பட்டு தவித்ததை மறந்து விட்டீரா என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராகி திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்திற்கு வரும் வழியில், நீதிமன்றத்திற்கு வெளியே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கொலையாளிகளை விரட்டி சென்று ஒருவரை மடக்கிப் பிடித்துள்ளனர். காரில் தப்பி சென்ற மற்றவர்களையும் கொலை நடந்த இரண்டே மணி நேரத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இவ்வளவு துரிதமாக செயல்பட்டு கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதை பொறுக்க முடியாமல், வழக்கம் போல சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்ற புழுத்துப்போன பொய்யை பாடத் தொடங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர். கடந்த அதிமுக ஆட்சியின் போது, தூத்துக்குடியில் வாழ்வாதார உரிமைக்காக போராடிய அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை, மறுநாள் காலையில் டி.வி.யில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என நா கூசாமல் பொய் சொன்ன எடப்பாடி பழனிசாமிக்கு சட்டம்- ஒழுங்கு பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

சாத்தான்குளம் தந்தை-மகன் அடித்துக் கொலை, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கோடநாடு கொலை சம்பவம் என பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படும் சூழலில் தமிழ்நாடு தவித்துக் கிடந்ததை மறந்துவிட்டீர்களா பழனிசாமி?. ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் அதிமுக ஆட்சியில் குற்றச்செயல்கள் பல்கிப் பெருகிக் கிடந்ததை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதன்படி 2020ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 8,91,700 ஆகும்.

2022ம் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 1,93,913 என மேலும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளை பார்க்கும் போதே மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டை எவராலும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒருவருக்கு மட்டும் புரியவே புரியாது அவர்தான் பழனிசாமி. “நகரம் பற்றி எரியும் போது அக்கறையின்றி பிடில் வாசித்து ஆனந்தப்பட்ட நீரோ மன்னனாய்” ஆட்சி நடத்திய பழனிசாமிக்கு தற்போது மக்கள் நலன் பேணும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியைக் கண்டு பொறாமையும் வயிற்று எரிச்சலும் வருவது இயல்பு தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post நெல்லை கொலை சம்பவத்தில் 2 மணிநேரத்தில் 4 பேர் கைது அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்பட்டதை மறந்து விட்டீரா? எடப்பாடிக்கு அமைச்சர் ரகுபதி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: