மதுரை, செப். 18: மதுரையில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் வடக்கு மாவட்ட திமுகவினர் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர். தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று காலை அய்யர்பங்களா கிருஷ்ணாநகரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினர். பின்னர் சமூக நீதி நாள் உறுதிமொழியை அமைச்சர் பி.மூர்த்தி உள்பட மதுரை வடக்கு மாவட்ட திமுகவினர் ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் வடிவேல் முருகன், பகுதி செயலாளர்கள் கவுரிசங்கர், சசிகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவுட் போஸ்டில் உள்ள பெரியார் திருவுருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி அறிவுறுத்துதலின் பேரில் திமுகவினர் திரளாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர் தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதி மொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் ராகவன் தலைமை வகித்தார். வக்கீல் ஜவகர், அணி அமைப்பாளர்கள் முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
The post தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு: அமைச்சர் பி. மூர்த்தி பங்கேற்பு appeared first on Dinakaran.