ஓணம் விடுமுறையால் சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

ஊட்டி : சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர் அக்டோர் மாதங்களில் 2வது சீசனும் கடைபிடிக்கப்படுகிறது.
2வது சீசனின் போது புதுமண தம்பதிகள் மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிடுவது வாடிக்கை. தற்போது ஊட்டியில் 2வது சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வர துவங்கியுள்ளனர். ஆண்டுதோறும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் மலையாள மொழி பேசும் மக்களின் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கேரளாவின் முக்கிய பண்டிகை என்பதால் அங்கு சுமார் 10 நாட்கள் விடுமுறை விடும்.

ஓணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பே வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு விமர்சையாக கொண்டாடுவார்கள். கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் முகாமிட்டு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து செல்வார்கள். கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் கடந்த ஜூலை மாத இறுதியில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தின் வடு இன்றும் மறையாததால் ஓணம் பண்டிகை விமர்சையாக நடைபெறவில்லை.

மிகவும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டது. இச்சம்பவம் காரணமாக ஊட்டிக்கும் குறைந்த அளவிலான கேரளா சுற்றுலா பயணிகளே வருகின்றனர். இதனால் 2வது சீசன் துவங்கி 15 நாட்களாக கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களான தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், நீர்வீழ்ச்சி, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் கேரள சுற்றுலா பயணிகள் கூட்டத்தை காண முடிந்தது.

இதேபோல் இதமான காலநிலை நிலவியதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி படகு இல்லத்தில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். அதே சமயம் இ-பாஸ் நடைமுறை உள்ளதால் வழக்கமாக வார விடுமுறை நாட்களில் வர கூடிய கூட்டத்தைவிட, குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஓணம் விடுமுறையால் சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: