சிவகங்கை மாவட்டத்திற்கு முல்லை பெரியாறு பாசன நீர் முழுமையாக வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

 

சிவகங்கை, செப். 14: சிவகங்கை மாவட்டத்திற்கு முல்லை பெரியாறு பாசன நீரை முழுமையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் முல்லை பெரியாறு பாசனத்தின் கீழ் 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 6,800 ஏக்கர் நிலங்கள் ஒரு போக பாசன பகுதியாக உள்ளன. சிவகங்கை மாவட்டத்திற்கு சீல்டு, லெஸ்சிஸ், 48 கால்வாய், கட்டாணிபட்டி ஒன்று மற்றும் இரண்டு ஆகிய கால்வாய்கள் வழியாக பெரியாறு நீர் திறக்கப்பட வேண்டும்.

ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்திற்கு நீர் திறக்கப்படும் போது, சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் திறக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. கடந்த 2021ம் ஆண்டு மட்டும் வரலாற்றில் முதன் முறையாக சிவகங்கை மாவட்ட பெரியாறு பாசன பகுதிகளுக்கு ஒரு போக சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து நீர் ஆகஸ்டு மாதத்திலேயே திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதத்தில் இருந்து மதுரை மாவட்டத்திற்கு இரு போக பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு தற்போது வரை நீர் வழங்கப்பட்டு வருகிறது. செப்.15ல் வைகை அணையில் இருந்து நீர் சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரியாறு பாசனம் மூலம் கட்டாணிப்பட்டி ஒன்று மற்றும் இரண்டாம் கால்வாய் வழி 20 கண்மாய்கள், 48வது மடைக்கால்வாயின் மூலம் 16கண்மாய்கள், சீல்டு கால்வாய் மூலம் 41 கண்மாய்கள், லெஸ்சிஸ் கால்வாய் மூலம் 52 கண்மாய்கள் பயன்பெறுகின்றன. கடந்த ஆண்டு மொத்தமுள்ள 129 கண்மாய்களில் சுமார் 25 கண்மாய்களுக்கு வெறும் 25சதவீதம் முதல் 30சதவீதம் மட்டுமே நீர் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பெரியாறு பாசன பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களும் பயன்பெறும் வகையில், முழுமையாக நீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியாறு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சிவகங்கை மாவட்டத்திற்கு முல்லை பெரியாறு பாசன நீர் முழுமையாக வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: