வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சரிபார்ப்பு தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களுக்கு விதிவிலக்கு

நெல்லை, டிச. 15: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மேற்கொள்வதில் நெல்லை, தூத்துக்குடி உட்பட 8 மாவட்டங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது. இதை முன்னிட்டு தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் துவக்கியுள்ளது. ஏற்கெனவே மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ள தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்க்கும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் கடந்த டிச.11ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக சென்னை தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் மாவட்ட கலெக்டர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம், திருவள்ளூர், நெல்லை, திருச்சி, கோவை, சேலம், தர்மபுரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணியை மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி கடிதம் அனுப்பியுள்ளனர். அதன் அடிப்படையில் முதல் கட்ட சரி பார்ப்பு பணி முடியும் வரை மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விதிவிலக்கு அளித்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் கூறுகையில் ‘‘ தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி பார்ப்பு பணி ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் நடைபெறும். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை விலக்கு அளிக்கக் கோரி கலெக்டர்கள் கடிதம் அனுப்பியதன் அடிப்படையில் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

Related Stories: