திருவெறும்பூர்: திருச்சி திருவெறும்பூர் அருகே பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் சுந்தர்ராஜ்(எ) கழுத்துவெட்டி சுந்தர்ராஜ்(33). திருமணமாகாதவர். பிரபல ரவுடியான இவர் மீது திருவெறும்பூர் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் ஒரு கொலை வழக்கு உள்பட 7 வழக்குகள் உள்ளது. சுந்தர்ராஜின் பக்கத்து வீட்டில் அவரது சித்தப்பா மணி வசிக்கிறார். மணி இன்று காலை தனது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்கு கட்டிலில் சுந்தர்ராஜ் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடலுக்கு அருகிலேயே தலை துண்டிக்கப்பட்டு தனியாக இருந்தது. அவரது உடலை பார்த்து மணி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
உடனடியாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து விசாரணை நடத்தினர். சுந்தர்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மணி வீட்டு சந்தில் காலி மது பாட்டில்கள் கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், சுந்தர்ராஜ் போலீசுக்கு பயந்து எப்போதும் இரவு தனது வீட்டில் தூங்காமல் நண்பர்கள், சித்தப்பா வீட்டு மாடி என பல இடங்களில் தூங்குவது வழக்கம். நேற்றிரவு சித்தப்பா வீட்டு மாடியில் படுத்திருந்தார். முன்னதாக சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அவருக்கு போதை ஏறியதும் அரிவாளால் சரமாரி வெட்டி, கழுத்தை அறுத்து தலையை தனியாக துண்டித்து உடல் அருகிலேயே வைத்துவிட்டு நண்பர்கள் தப்பி சென்றது தெரியவந்தது.
கொலை செய்யப்பட்ட சுந்தர்ராஜ் கடந்த 2022ல் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து இதே பகுதியை சேர்ந்த கொத்தனார் ஜெயபால் என்பவரை கொலை செய்துள்ளார். இதனால் இதற்கு பழிக்கு பழியாக சுந்தர்ராஜ் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு எதுவும் காரணமா நேற்றிரவு அவருடன் மது அருந்தியவர்கள் யார் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கழுத்துவெட்டி பெயர் ஏன்?
யாரையாவது தாக்க வேண்டும் என்றால் சுந்தர்ராஜ், முதலில் அவர்களது கழுத்தில் தான் வெட்டுவாராம். இதனால் அவருக்கு கழுத்து வெட்டி சுந்தர்ராஜ் என்ற பெயர் வந்தது. தற்போது சுந்தர்ராஜ் பாணியிலேயே அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
The post தலை துண்டித்து ரவுடி கொடூர கொலை: போதை நண்பர்கள் வெறிச்செயல் appeared first on Dinakaran.