நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி சிறப்பு முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர், செப். 13: திருவள்ளூர் அடுத்த பட்டரைப் பெருமந்தூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி கூட்ட அரங்கில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வு படி என்ற சிறப்பு முகாம் துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். அப்போது கலெக்டர் பேசுகையில், முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் உயர்வு படி என்ற முகாம் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக 12ம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு விண்ணப்பிக்காத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சார்ந்த மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உயர்வுக்கு படி முகாம் வாயிலாக உயர்கல்வி வாய்ப்புகளை வழங்க தமிழக அரசு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.

அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி பல்வேறு துறைகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பயிற்சித்துறை, வருவாய்த்துறை, உயர்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற துறைகள் மற்றும் முன்னோடி வங்கிகள் பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து நம் மாவட்டத்தில் இனம் காணப்பட்டுள்ள 2022 – 23 மற்றும் 2023 – 24ம் கல்வியாண்டில் கல்வி துறையில் சேராத மாணவர்களுக்கு உதவ உள்ளனர். இந்த முகாம் உயர்கல்வி வாய்ப்புகளை பெறாத மாணவர்களுக்கு பேருதவியாக அமையும்.

முகாம்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஐடிஐ மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களையும் வாய்ப்புகளையும் வழங்க உள்ளது. முன்னோடி வங்கிகள் கல்விக்கடன் ₹7.50 லட்சம் உதவிகள் பெறுவதற்கான ஆலோசனைகளும், அது மட்டும் இல்லாமல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வருவாய் துறை மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்கவும் தயார் நிலையில் உள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி தொடராத மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து அதிக அளவிலான மாணவர்கள் முகாம்களில் கலந்து கொள்ள வைக்கப்படுகிறது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ்நெறி வழிகாட்டுதல்களை வழங்க உள்ளார்கள். உயர்வுக்கு படி முகாம் தொடர்ந்து செயல்படுவதால் அதிக அளவிலான மாணவர்கள் பயன்பெறுவார்கள். நீங்கள் படித்தால்தான் உங்கள் குடும்பம் மற்றும் நம்மை சார்ந்த மக்கள் நல்ல நிலைக்கு பொருளாதாரத்தில் உயர்வார்கள். எனவே படிப்பு என்ற வேட்கை உங்களுக்கு இருக்க வேண்டும். ஏனென்றால் இளைஞர் கையில்தான் நாடு உள்ளது. நாம் உயர்ந்தால்தான் நாடு முன்னேறும் நாட்டின் உற்பத்தி உயரும். ஆகவே நாட்டின் முன்னேற்றத்திற்காக நீ படி. ஆகையால் தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. தோல்வியை கண்டு அஞ்சி விடாமல் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் படிப்பு என்ற பயணத்தை தொடருங்கள். நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். வாருங்கள் என பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.ரவிச்சந்திரன், சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி மற்றும் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி சிறப்பு முகாம்: கலெக்டர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: