செப். 24 முதல் 29ம் தேதி வரை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நடைபயணம்

தஞ்சாவூர், செப். 12: காவிரி டெல்டா மாவட்டங்கள் ஆகிய வேளாண் மண்டலத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் செப்டம்பர் 24 பூம்புகாரில் பரப்புரை நடை பயணம் துவங்கி செப்டம்பர் 29 தஞ்சாவூரில் வந்து நிறைவடைகிறது. பரப்புரை நடை பயண அனுமதிக்காக நேற்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செயராமன் தலைமையில் நிர்வாகி சித்ரா ஜெயராமன், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் சேக் அலாவுதீன், திராவிடர் விடுதலைக் கழக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் மகேஷ் ஆகியோர் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பரப்புரைப் பயண அனுமதிக்கான கோரிக்கையை அளித்தனர். பின்னர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செயராமன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயமே முதன்மைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிர்கள் மற்றும் உளுந்து,பயறு, பருத்தி உள்ளிட்ட சாகுபடிகளும் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு தோண்டுதல், மற்றும் மீத்தேன்,ஷேல்கேஸ், ஹைட்ரோ கார்பன், நிலக்கரி உள்ளிட்ட விவசாயத்திற்கு எதிரான திட்டங்களால் விவசாயம் அழிந்து, டெல்டா பகுதி பாலைவனம் ஆகிற சூழ்நிலைகள் வந்த பொழுது, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு தோழமை அமைப்புகளுடன் மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தி, விவசாயத்துக்கு எதிரான பாதிப்புத் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் காவிரிப் படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. காவிரி படுகை மாவட்டங்கள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 24ம் தேதி பூம்புகாரில் பரப்புரை நடைப்பயணம் துவங்கி மயிலாடுதுறை, குத்தாலம், கும்பகோணம், பாபநாசம் வழியாக 29ம் தேதி தஞ்சாவூர் வந்து நிறைவடைகிறது.காவிரி படுகை முழுவதும் நீர் பாசன கட்டமைப்பு, நீர் மேலாண்மை செயல்பாடுகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளில் ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி பரப்புரை நடைப் பயணத்தில் முன்வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post செப். 24 முதல் 29ம் தேதி வரை மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நடைபயணம் appeared first on Dinakaran.

Related Stories: