விசிக மாநாட்டில் பங்கேற்பா?

நாமக்கல்: பாமக தலைவர் அன்புமணி எம்பி, நாமக்கல்லில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புதிய கல்வி கொள்கையில் நல்ல அம்சங்களும் உள்ளது. சில அம்சங்கள் மாநில அரசுக்கு பாதகமாக இருக்கிறது. நாங்கள் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம். ஒன்றிய அரசின் கொள்கைகளை, மாநில அரசுகள் மீது திணிக்கக் கூடாது. ஒன்றிய அரசு புதிய கல்வி கொள்கையை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறது. இல்லாவிட்டால் நிதி கொடுக்கமாட்டோம் என கூறுகிறார்கள். இது தவறான ஒன்றாகும்.

கல்வி கொடுப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். இதனால் மாணவர்கள் பாதிக்கக் கூடாது. கல்வி மாநில பட்டியலுக்கு வரவேண்டும். பாஜ கூட்டணியில் பாமக இருந்தாலும், பாமக அதன் கொள்கையை விட்டுக் கொடுக்காது. தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் 40 ஆண்டுக்கு மேலாக போராடி வருகிறார். தமிழகத்தில் உழைக்கின்ற பெரிய சமுதாயங்களான பட்டியலின சமுதாயமும், வன்னியர் சமுதாயமும் இன்று மதுவுக்கு அடிமையாகி விட்டது. மதுவில் இருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். மதுவுக்கு எதிராக யார் போராடினாலும், நாங்கள் வரவேற்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பரமக்குடி: இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் நேற்று மரியாதை செலுத்திய பின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் ஒற்றைக் கருத்து உடைய அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என திருமாவளவன் அறிவித்தார். அவர் அழைப்பை ஏற்று அந்த மாநாட்டில் நாங்கள் கலந்து கொள்வது குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

மாணவர்களின் பிஞ்சு நெஞ்சில் விஷத்தைப் பரப்பும் விஷயத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்து முடிந்த எம்பி தேர்தலில், இந்தியாவில் ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். அதற்கு அடுத்தப்படியாக ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் கட்சிக்கொடி சின்னம் ஏதுமின்றி, தன்னந்தனியாக சுயேச்சையாக போட்டியிட்டு 3 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் பெற்ற ஒரே சுயேட்சை வேட்பாளர் நான் தான். இதன் மூலம் தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் எங்கள் பக்கமே உள்ளனர் என நிரூபணமாகியுள்ளது. எனவே, அதிமுகவை மீட்கும் தர்மயுத்த போராட்டம் தொடரும்’’ என்றார்.

 

The post விசிக மாநாட்டில் பங்கேற்பா? appeared first on Dinakaran.

Related Stories: