ஆந்திராவில் இருந்து வேனில் கடத்தி வந்த 709 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: டிரைவர் கைது

 

திருத்தணி, செப். 11: ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக எஸ்பிக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படை எஸ்ஐ குமார் தலைமையிலான போலீசார் நேற்று கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நல்லாட்டூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டினர். அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் சாக்குப்பை மூட்டைகளில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 709 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு குட்கா பொருட்களை கடத்தியது தெரிய வந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மளிகைக்கடையில் பதுக்கல் : மீஞ்சூர் பஜார் பகுதிகளில் அரசு தடை செய்ய பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் செங்குன்றம் சரக துணை ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி ஆணையர் ராஜா ராபர்ட் மேற்பார்வையில் மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளி ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் மீஞ்சூர் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

சோமநாத ஈஸ்வரர் நகர் பகுதியில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சோதனை செய்தபோது, அங்கிருந்த 25 கிலோ எடையுள்ள ஹான்ஸ், கூல்லிப் போன்ற போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் அரியின்வாயல் பகுதியில் பைக்கில் போதை பாக்கு பாக்கெட்டுகளை விற்பனை செய்து வந்த பாலாஜி (53), அஜித்குமார் (28), அப்துல் காதர் (55) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 25.கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மூவர் மீதும் வழக்குப்பதிந்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post ஆந்திராவில் இருந்து வேனில் கடத்தி வந்த 709 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: டிரைவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: