வீட்டை விட்டு துரத்திய பாசக்கார மகன் தாய் வீட்டில் சீதனமாக வழங்கிய சொத்தை மீட்டு தாருங்கள்

 

* வயதான காலத்தில் நிற்கதியாகி விட்டோம், விழுப்புரம் கலெக்டரிடம் பெற்றோர் புகார் மனு

விழுப்புரம், செப். 10: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அகூர் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி, அவரது மனைவி சந்திரா (68) ஆகியோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, எனது தாய் வீட்டில் சீதனமாக கொடுத்த வீட்டு மனையில் பல ஆண்டுகளாக கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தோம். எனக்கு கீதா, சுப்புலட்சுமி, சுஜிதா என்ற பெண் பிள்ளைகளும், ரஞ்சித் என்ற ஒரு பிள்ளையும் உள்ளனர்.

அதில் ரஞ்சித் என்பவர் நான் வங்கிக்கடன் பெற்று வாழ்க்கையில் வளர வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பேரில் நம்பி எனது வீட்டையும், கடையையும் எழுதிக்கொடுத்து விட்டேன். சில நாட்களில் என்னையும், கணவரையும் அடித்து வெளியேற்றிவிட்டார். வெள்ளிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்து அதன்பேரில் எனது மகனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்து விட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் உங்களை வாழவிட மாட்டேன் என்று கூறி மீண்டும் வெளியேற்றி விட்டார். வயதான காலத்தில் கஷ்டப்பட்டு வருகிறோம். அன்றாட உணவுக்கும் வழியில்லாமல் வெளியில் நிற்கதியாக இருந்து வருகிறோம்.

எனவே நான் மகனுக்கு எழுதிக்கொடுத்த பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் மனு அளித்தேன். அப்போது சப்-கலெக்டர் அலுவலகத்திலிருந்து சமரச அலுவலர் மூலம் சுமூகமான தீர்ப்பை ஏற்படுத்தி கொள்ளுங்கள் என்று கூறி அறிவிப்பு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் மகன் மீது நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டுத்தர வேண்டும், இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post வீட்டை விட்டு துரத்திய பாசக்கார மகன் தாய் வீட்டில் சீதனமாக வழங்கிய சொத்தை மீட்டு தாருங்கள் appeared first on Dinakaran.

Related Stories: