அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றிக்காக இந்தி பிரசார பாடல் வெளியீடு

வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர். இன்று இருவரும் நேரடியாக விவாதம் நடத்த உள்ளனர். இந்த நேரடி விவாதம் உலகம் முழுவதும் நேரலையாக ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரம் இருதரப்பிலும் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக பாலிவுட் பிரசார பாடலை அமெரிக்க வாழ் இந்திய தொழிலதிபர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆஸ்கார் விருது பெற்ற நாட்டு நாட்டு பாடலின் இந்தி பாடலான நாச்சோ நாச்சோ என்ற பிரசார பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சிபானி காஷ்யப் பாடல் பாடியுள்ளார். ரிதேஷ் பாரிக் தயாரித்துள்ளார். இது குறித்து கமலா ஹாரிசின் நிதி கமிட்டி உறுப்பினர் அஜய் ஜெயின் பட்டோரியோ கூறுகையில்,‘‘நாச்சோ, நாச்சோ என்பது பாடல் மட்டும் அல்ல, அது ஒரு இயக்கம். அமெரிக்காவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ள மாகாணங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் உள்ள மக்களை இணைக்கும் வகையில் பிரசாரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் 44 லட்சம் இந்தியர்கள் மற்றும் 60 லட்சம் தெற்காசியர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். தேர்தலில் கமலா ஹாரிசை வெற்றி பெற செய்து அதிபர் நாற்காலியில் அமர்த்த வேண்டும் என்பதே எங்களுடைய இலட்சியம் ’’ என்றார்.

 

The post அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றிக்காக இந்தி பிரசார பாடல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: