வங்கதேசத்திற்கு எதிரான தொடர்; இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார்?.. குழப்பத்தில் ரசிகர்கள்

மும்பை: வங்கதேச கிரிக்கெட் அணி அடுத்த வாரத்தில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி.20போட்டிகளில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் செப்.19-23 வரை சென்னை சேப்பாக்கத்திலும், 2வது டெஸ்ட், செப்.27-அக்.1ம்தேதி வரை கான்பூரிலும் நடைபெறுகிறது. தொடர்ந்து 3 டி.20போட்டிகள் முறையே, அக்.6ம்தேதி குவாலியர், அக்.9ம் தேதி டெல்லி, 12ம்தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட்போட்டிக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. விபத்தில் சிக்கி மீண்ட ரிஷப் பன்ட், கே.எல்.ராகுல் அணிக்கு திரும்பி உள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்தொடரில், மனைவியின் 2வது பிரசவத்திற்காக விலகிய கோஹ்லி, அணிக்கு திரும்பி உள்ளார்.மற்றபடி ஜெய்ஸ்வால், சுப்மன்கில், ஜடேஜா, அஸ்வின், குல்தீப், சிராஜ் இடம் பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல், சர்பராஸ் கான்,ஆகாஷ் தீப், ஆகியோர தங்கள் இடத்தை தக்க வைத்துள்ளனர்.  இடது கை வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் முதன்முறையாக இந்திய அணியில் இணைந்துள்ளார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான யாஷ் தயாள் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக இந்த ஆண்டு15விக்கெட் எடுத்தார். துலிப் டிராபியில் முதல் போட்டியில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கருத்தில் கொண்டு இடது கை வேகப்பந்துவீச்சாளராக அவர் தேர்வாகி உள்ளார். டி.20 உலக கோப்பைக்கு பின்னர் இலங்கை தொடரில் ஆடாமல் ஓய்வில் இருந்த பும்ரா முதல் டெஸ்ட்டில் ஆட உள்ளார். கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா துணை கேப்டனாக செயல்பட்ட நிலையில், தற்போது அணியின் துணை கேப்டன் யார் என அறிவிக்கப்படவில்லை. பும்ரா அணியில் இடம்பெற்ற போதிலும் துணைகேப்டனாக நியமிக்கப்படவில்லை. இதனால் ரோகித்சர்மா களத்தில் இல்லாதபோது, அணியை வழிநடத்துவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

36 வயதான ரோகித்சர்மா , அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன் டிராபி பைனல் வரை கேப்டனாக நீடிப்பார். அதற்கு பின்னர் கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் துணை கேப்டன் நியமிக்கப்படாதது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அண்மையில் இலங்கைக்கு எதிரான டி.20 மற்றும் ஒருநாள் போட்டியில் துணை கேப்டனாக சுப்மன்கில் செயல்பட்டார். டெஸ்ட்டுக்கு அதிகாரப்பூர்வமாக துணை கேப்டனாக பெயரிடப்படவில்லை என்றாலும், பும்ரா ரோகித்துக்கு களத்தில் உதவுவார் என கூறப்படுகிறது. கில், ரிஷப்பன்ட் ஆகியோரும் துணை கேப்டன் ரேசில் இருக்கின்றனர். இதனிடையே வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 12ம் தேதி முதல் 5 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் பயிற்சியாளர் கவுதம்கம்பீர் தலைமையின் கீழ் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

சென்னை டெஸ்ட் டிக்கெட் விற்பனை
சென்னை சேப்பாக்கம் எம்ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடைசியாக 2021ம் ஆண்டு பிப்ரவரி 13-16ம்தேதி வரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் நடைபெற்றது. தற்போது 3 ஆண்டுக்கு பின் வங்கதேசத்திற்கு எதிராக முதல் டெஸ்ட் வரும் 19-23ம்தேதி நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.45 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது. டிக்கெட் விலை குறைந்த பட்சம்ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.15ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post வங்கதேசத்திற்கு எதிரான தொடர்; இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் யார்?.. குழப்பத்தில் ரசிகர்கள் appeared first on Dinakaran.

Related Stories: