தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல்படும் பழனிசாமி அதை திசைதிருப்ப உளறுகிறார்: திமுக கடும் கண்டனம்


சென்னை: தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல்படும் பழனிசாமி அதை திசைதிருப்ப உளறுகிறார் என்று திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவரை, அமைச்சர்களோடு நெருக்கமாக இருந்தாலேயே பள்ளியில் பேச அனுமதித்திருக்கிறார்கள் எனக் கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. முதல்வராக இருந்த நீங்கள் ஒரு விஐபிதானே? ஒரு விஐபி-யைத் தேடி நிறையப் பேர் பார்க்க வருவார்கள் என்பது அடிப்படை தியரி. அப்படிப் பார்க்க வருகிறவர்கள் ஒவ்வொருவரின் பின்புலத்தை அலசிப் பார்த்துவிட்டா அனுமதி அளிப்பார்கள்? இதுகூட தெரியாமல் நீங்கள் எப்படி முதல்வராக பொறுப்பு வகித்தீர்கள்? எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்?.

பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான் கோவை, வேலாண்டிபாளையத்தை சேர்ந்த ஆனந்த் மற்றும் அவருடைய கோஷ்டியினர் கோடிக்கணக்கான புதிய 2 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு 2018ல் கைதானார்கள். கள்ளநோட்டு கும்பலுடன் பழனிசாமி இருக்கும் புகைப்படம் வெளியாகி அன்றைக்குச் சந்தி சிரித்தபோது அவர் எங்கே போனார்? பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கைது செய்யப்பட்டார். அவருக்கு சீட் கொடுத்தது பொதுச் செயலாளர் பழனிசாமிதானே? சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் பேச்சுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும் எனச் சொல்லும் பழனிசாமி, ஆனந்த், ஹரிதரன் ஆகியோரது செயல்களுக்கும் பொறுப்பு ஏற்றாரா?

அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி மீதான தாக்குதல் போலீசுக்கே பாதுகாப்பில்லை என்பதை வெளிப்படுத்துகிறது என பழனிசாமி புலம்பியிருக்கிறார். பழனிசாமி ஆட்சியில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை மூடிவிட்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கடைகளை அமைக்க முயன்றபோது திருப்பூர், சாமளாபுரத்தில் போராடிய பெண்கள் போலீசாரால் தாக்கப்பட்டனர். ஆனால், ’சாமளாபுரத்தில் பெண்கள்தான் போலீஸை தாக்கினார்கள். தமிழகத்தில் போராட்டங்கள் நடத்துவது பேஷனாகிவிட்டது’ என்று அன்றைக்கு வியாக்கியானம் பேசியவர்தான் பழனிசாமி. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்றிருக்கிறார். அதை மறைக்கவே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறுகிறார்கள் என்றும் உளறிக் கொட்டியிருக்கிறார்.

75 நாட்கள் அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது ஒரு போட்டோவை கூட வெளியிடாதவர்கள், முதல்வரின் உடல்நிலையைப் பற்றிப் பேச அருகதை இருக்கிறதா? தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல் படும் பழனிசாமி அதை திசைதிருப்ப ஏதேதோ பேசுகிறார். அவருக்கு வந்திருக்கும் பொறாமை நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தனது ஆட்சியில் தமிழ்நாட்டை அனைத்து துறையிலும் தரை மட்டத்துக்கு இறக்கி பாழ்படுத்திய பழனிசாமிக்கு யாரையும் குறை சொல்லும் தகுதியோ அருகதையோ கிடையாது. தானும் இருக்கிறேன் என்பதைக் காட்ட நடத்தும் பேட்டி நாடகத்தை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தினந்தோறும் கையெழுத்தாகும் ஒப்பந்தங்களின் பட்டியலைப் பார்த்து வயிற்றெரிச்சல்படும் பழனிசாமி அதை திசைதிருப்ப உளறுகிறார்: திமுக கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: