விழுப்புரம், செப். 7: விக்கிரவாண்டியில் வருகிற 23ம் தேதி நடிகர் விஜய் கட்சியின் மாநாடுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமான பதிலை விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷிடம் தவெக தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் வரும் 23ம் தேதி நடத்த திட்டமிட்டு, இதற்காக அனுமதி கேட்டு கடந்த மாதம் 28ம் தேதி எஸ்பியிடம் மனு அளித்தனர். அன்றைய தினமே கூடுதல் எஸ்பி திருமால் மாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டிருந்த இடத்தை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி மாநாடு தொடர்பாக விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ், 21 கேள்விகளை கேட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்துக்கு ேநாட்டீஸ் அனுப்பினார்.
மாநாடு தொடங்கும் நேரம், முடியும் நேரம், நிகழ்ச்சி நிரல், மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கிய நபர்கள், வாகன நிறுத்தம் ஏற்பாடு, அந்த இடத்துக்கான உரிமையாளர்கள் யார்? உள்ளிட்ட 21 கேள்விகளுக்கு 5 நாட்களில் பதில் அளிக்கவும் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்றைய தினம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த், விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷிடம் காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமான பதிலை அளித்தார். தொடர்ந்து, புஸ்ஸி ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘காவல்துறை கேட்ட 21 கேள்விகளுக்கான பதில்களை கொடுத்துள்ளோம். உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி ஓரிரு நாட்களில் பதில் சொல்வதாக அவர் தெரிவித்துள்ளனர். அதன்பின் முறைப்படி மாநாடு குறித்து தலைவர் அறிவிப்பார்’ என்றார்.
பெண் போலீஸ் பைக் மீது நிர்வாகியின் கார் மோதல்……
விழுப்புரம் டிஎஸ்பியிடம் மனு கொடுப்பதற்காக த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸிஆனந்த் வந்தார். அவர் வந்த காருக்கு பின்னால் 5க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காரும் வந்தன. முருங்கப்பாளைய தெருவில் உள்ள டிஎஸ்பி அலுவலகம் முன்பு இந்த கார்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வேறு வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. அப்போது அந்த வழியாக காவல்துறை குடியிருப்புக்கு தனது மகளை அழைத்துச்சென்ற பெண் போலீஸ் பைக் மீது த.வெ.க நிர்வாகியின் கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேசமயம் பைக் பின் பகுதி சேதமடைந்தது. உடனடியாக அங்கிருந்த டிஎஸ்பி முகாம் அலுவலக போலீசார் அவர்களை அனுப்பிவைத்து போக்குவரத்தை சரிசெய்தனர்.
The post விக்கிரவாண்டியில் 23ம் தேதி மாநாடு காவல்துறையின் கேள்விகளுக்கு விஜய் கட்சி நிர்வாகி பதில் appeared first on Dinakaran.