திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

திருவள்ளூர், செப். 5: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலைய விரிவுரையாளர் 1, தலைமை ஆசிரியர்கள் 6, தனியார் பள்ளி முதல்வர் 1, பட்டதாரி ஆசிரியர்கள் 4, இடைநிலை ஆசிரியர் 1 என மொத்தம் 13 பேருக்கு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது வழங்க தேர்வு செய்துள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் பி.ரவிச்சந்திரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ம் தேதி ஆசிரியர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அன்றைய நாளில் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றுவோர் தேர்வு செய்யப்பட்டு, நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 13 பேருக்கு நல்லாசிரியர் விருதுக்கு இந்த ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் வருமாறு: திருவூரில் செயல்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலைய முதுநிலை விரிவுரையாளர் ஏ.ஜெகதீஸ்வரி, திருவூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.மலர்கொடி, வேலப்பன்சாவடி அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சி.வரலட்சுமி, ஆரிக்கம்பேடு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.ஜெயராமன், ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இ.காவேரி, பள்ளிப்பட்டு அடுத்த கேசவராஜகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ப.ஸ்டேன்லி சுகுமார், பூண்டி அடுத்த சென்றாயன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சு.முரளி, ஆவடி மாநகராட்சி கோவர்த்தனகிரி நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் கே.சரஸ்வதி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் இந்துமதி, வில்லிவாக்கம், புதிய கன்னியம்மன் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ந.திருமால், பூந்தமல்லி வயலாநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜோ.சிங்கராஜ், பூந்தமல்லி ஒன்றியம் காட்டுப்பாக்கம் ஏவிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஜோஸ்பின் ஜெயந்தி, திருவள்ளூர் மாவட்ட அரசு அலுவலர் குடியிருப்பு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சி.சண்முகபிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான விழா செங்கல்பட்டு அடுத்த வண்டலூர் பிரசிடென்சி பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று 5ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ₹10 ஆயிரத்துக்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் ஆகியவற்றை வழங்க உள்ளனர். இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியர் விருது: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: