பாகூரில் இருந்து மேல்மலையனூருக்கு சென்ற வேன் தாறுமாறாக ஓடி கார், மின்கம்பத்தில் மோதி விபத்து: 20 பக்தர்கள் உயிர் தப்பினர்

பாகூர்: புதுச்சேரி மாநிலம் பாகூரிலிருந்து 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று காலை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்வதற்காக சுற்றுலா வேனில் புறப்பட்டனர். இந்த வேனை வில்லியனூர் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த ஆகாஷ் (24) என்ற வாலிபர் ஓட்டிச் சென்றார். வேன் பாகூர் மாரியம்மன் கோவிலில் பூஜை செய்து காலை 6 மணிக்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது தூரத்திலேயே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி மின்கம்பங்கள், மரம் மற்றும் காரில் மோதி நின்றது. இந்த விபத்தில் மின்கம்பம் உடைந்து தொங்கியது. மேலும் மரம் மற்றும் கார் ஆகியவையும் சேதமடைந்தன. மின்கம்பம் உடைந்து தொங்கியதால் மின்துறை ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்தனர்.

இந்த விபத்தில் வேனில் சென்ற டிரைவர் மற்றும் பக்தர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த தெற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய வேன் மற்றும் காரை மீட்டனர். வேன் ஓட்டுனர் ஆகாஷை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆகாஷ் நேற்றிரவு வேறு ஒரு சவாரிக்கு சென்று விட்டு ஓய்வில்லாமல் மீண்டும் இன்று அதிகாலை பாகூரில் இருந்து மேல்மலையனூருக்கு பக்தர்களை வேனில் ஏற்றிக்கொண்டு புறப்படும் போது தூக்க கலக்கத்தில் மின்கம்பம், மரம், காரில் மோதி விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பாகூரில் இருந்து மேல்மலையனூருக்கு சென்ற வேன் தாறுமாறாக ஓடி கார், மின்கம்பத்தில் மோதி விபத்து: 20 பக்தர்கள் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.

Related Stories: