ஆர்.கே.பேட்டை, செப். 2: ஆர்.கே.பேட்டை அருகே சுடுகாட்டிற்கு செல்லும் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதால், அகற்றி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனூர் மற்றும் வங்கனூர் மேட்டுக்காலனி பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேரும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள், வங்கனூர் மேட்டுக்காலனி சுடுகாட்டிற்கு செல்லும் சாலையோரத்தில் கொட்டிவிட்டு செல்கின்றனர்.
இவ்வாறு, கொட்டப்படும் குப்பைக்கழிவுகளால், அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர். மேலும், குப்பைகள் கொட்டியுள்ள பகுதியின் வழியாக சென்ற 4 மாடுகள் தவறி விழுந்து பலத்த காயம் அடைந்துள்ளன. இதனால், சுடுகாட்டிற்கு செல்லும் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள், பலமுறை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என வங்கனூர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post ஆர்.கே.பேட்டை அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் நோய் அபாயம் appeared first on Dinakaran.