நாகரிக வளர்ச்சியில் கிராம வாழ்க்கை முறைகள் பெரும் மாற்றம் குளிர்காலத்தில் காண முடியாத இரவு நேர கம்பளி விற்பனை வியாபாரிகள்

திருத்தணி,டிச.10: நாகரிகம் அசுர வளர்ச்சி பாரம்பரிய கிராம வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. சொகுசு வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்ட மக்கள் அதிக அளவில் கிராமங்களை காலி செய்து நகர்ப்பகுதிகளில் குடியேறி வருகின்றனர். மேலும், குண்டு ஊசி முதல் உணவு வரை ஆன்லைனில் ஆர்டர் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிய காலகட்டத்தில் கிராமங்களின் வாழ்க்கை முறை தோற்றமும் மாறியுள்ளது. கார்த்திகை மாதம் என்றால் கிராமங்களில் ஐயப்ப பக்தர்கள் ஆரவாரம், பெண்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வைப்பது, குளிர் காலத்தின் தொடங்கும் நேரத்தில் வியாபாரிகள் கூட்டமாக வந்து ஒரு இடத்தில் தங்கி மாலை 6 மணிக்கு மேல் சைக்கிள்களில் கிராமங்களுக்கு சென்று மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கடை விரித்து கம்பளி, போர்வை வியாபாரத்தில் ஈடுபடுவதை பார்த்திருப்போம். கம்பளி வியாபாரத்தில் ஈடுபடுவர்கள் சுமார் 2 மாதம் வியாபாரம் நன்றாக நடக்கும். ஆனால், நாகரிக மாற்றம் சிறு வியாபாரிகளுக்கு மட்டுமின்றி தெருக்களில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் வாழ்க்கை முறைக்கு பெரும் சவால் ஏற்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளில் கிராமங்களில் இரவு நேரத்தில் கம்பளி விற்பனை வெகுவாக குறைந்த நிலையில் வியாபாரிகள் எண்ணிக்கையும் ஐஸ் போல் குறைந்துவிட்டது. இப்போதெல்லாம் கிராமங்களில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் கம்பளி வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்களை காண்பது அரிதாகிவிட்டது. ஆன்லைன் வர்த்தகம், ஷாப்பிங் என்று பெரும் ஜவுளி கடைகளுக்கு சென்று ஆடைகள் வாங்கும் பழக்கம் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து விட்ட நிலையில் இரவு நேர கம்பளி விற்பனை மறைந்து வருகிறது. நகர் பகுதிகளில் மட்டும் சாலையோரங்களில் கம்பளி, குளிர்கால ஆடைகள் விற்பனை காண முடிகிறது. எதிர் வரும் தலைமுறைக்கு கிராமங்களில் இரவு நேரங்களில் குளிர் கால கம்பளி விற்பனை என்பது பாடத்தில் மட்டுமே தெரிந்துக் கொள்ள முடியும் என்ற நிலை நாகரிக வாழ்க்கை முறை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: