கொல்கத்தா மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவுரை

டெல்லி: போராட்டம் நடத்திவரும் மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் முதுகலை பெண் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதிகேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணை வந்தது. அப்போது பயிற்சி மருத்துவர் கொலை குறித்து முதலில் விசாரித்த கொல்கத்தா காவல்துறையும், இதனையடுத்து விசாரணையை மேற்கொள்ளத் தொடங்கிய சிபிஐ-யும் உச்சநீதிமன்றத்தில் தங்கள் அறிக்கைகளை தாக்கல் செய்தனர். சிபிஐ மற்றும் கொல்கத்தா காவல்துறை தாக்கல் செய்த நிலை அறிக்கைகளை உச்சநீதிமன்றம் பதிவு செய்தது.

அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட், போராட்டம் நடத்திவரும் மருத்துவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என நீதிபதி அறிவுரை வழங்கினார். ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது. கொல்கத்தா மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். மருத்துவர்களுக்கு வருகைப் பதிவு அளிக்க வேண்டும் என எங்களால் கூறமுடியாது. மருத்துவர்களின் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்கமுடியாது. மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிடில் அவர்கள் விடுப்பு எடுத்தவர்களாகத்தான் கருதப்படுவர்.

போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் பணிக்குச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். மனிதாபிமானமற்ற முறையில் மருத்துவர்கள் 36 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கப்படுகின்றனர். மருத்துவர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது, பயிற்சி மருத்துவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத், நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தேசிய பணிக்குழுவில் (NTF) பயிற்சி மருத்துவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த கோரிக்கை ஏற்கப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்தார்.

The post கொல்கத்தா மருத்துவர் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: