பார்டர் – கவாஸ்கர் டிராபி: 4 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

 

 

மெல்போர்ன்: பார்டர்-கவாஸ்கர் டிராஃபி தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெல்போர்ன் நகரில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களும், 2வது இன்னிங்சில் 234 ரன்களும் எடுத்தது. முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்த இந்திய அணி, 2வது இன்னிங்சில் 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 155 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் 4வது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. பாக்சிங் டே என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 474 ரன்கள் குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 105 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாக்சிங் டே டெஸ்ட்டில் வெற்றிபெற இந்தியாவுக்கு 340 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆட்டத்தின் கடைசி நாளான இன்று 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இதில், ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ரோகித் சர்மா 9 ரன்னிலும், கே.எல். ராகுல் டக் அவுட், கோலி 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய ரிஷப் பண்ட் 30 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய ஜடேஜா 2 ரன், நிதிஷ் குமார் 1 ரன், ஆகாஷ் தீப் 7 ரன் எடுத்து அவுட் ஆகினர். மறுபுறம் நிதானமாக ஆடி வந்த ஜெய்ஸ்வால் 84 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் இந்தியா 79.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 155 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 184 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது.

 

The post பார்டர் – கவாஸ்கர் டிராபி: 4 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி! appeared first on Dinakaran.

Related Stories: